செய்திகள்
வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம்

கொரோனாவை கட்டுப்படுத்த 200 குழுவினர் வீடு வீடாக ஆய்வு- கலெக்டர் தகவல்

Published On 2020-07-12 13:14 GMT   |   Update On 2020-07-12 13:14 GMT
வேலூர், குடியாத்தம், பேரணாம்பட்டு பகுதிகளில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக 200-க்கும் மேற்பட்ட குழுவினர் வீடு, வீடாக சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள் என கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.
வேலூர்:

வேலூர் கலெக்டர் சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது. வேலூர் மாநகராட்சிக்கு அடுத்தப்படியாக குடியாத்தம், பேரணாம்பட்டு நகராட்சிகளில் அதிகம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு உயிரிழந்த மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட நபர்களின் வீடுகள் உள்ள பகுதிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

அதைத்தவிர தொற்று அதிகரித்து வரும் வேலூர், குடியாத்தம், பேரணாம்பட்டு பகுதிகளில் ஆய்வு செய்ய பல்வேறு அரசு துறையினர் அடங்கிய 200-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுவினர் வீடு, வீடாக சென்று சளி, காய்ச்சல், இருமல், சர்க்கரைநோய், ரத்தஅழுத்தம் ஆகிய உடல்நலக்குறைவு உள்ளவர்களை கண்டறிகின்றனர். பின்னர் அவர்களுக்கு அருகே உள்ள மருத்துவமனையில் கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதில், தொற்று இருப்பது உறுதியானால் ஆரம்ப நிலையிலேயே மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்கள்.

மாவட்டம் முழுவதும் கொரோனா தொற்றால் தனிமைப்படுத்தப்பட்ட நபர்களுக்கு மளிகை, காய்கறி, மருந்து பொருட்கள் வாங்க 2,600 தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். குடியாத்தம் ராஜகோபால் பாலிடெக்னிக் மாவட்டத்தில் 2-வது சித்த மருத்துவ சிகிச்சை மையமாக உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அனைத்துத்துறை ஊழியர்களுக்கும், நோய் தொற்று உள்ளவர்கள் உள்பட 15 ஆயிரம் பேருக்கு ஆயுர்வேத மருந்துகள் வழங்கப்படும். கொரோனா தொற்று பரிசோதனை முடிவில் ‘நெகட்டிவ்’ என்று வந்தவர்களுக்கு அவர்களின் செல்போனுக்கு குறுந்தகவல் அனுப்பப்பட்டு வருகிறது.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News