செய்திகள்
கடலூர் தேவனாம்பட்டினம் கபிலன் நகரில் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடந்ததை படத்தில் காணலாம்.

கடலூரில் கட்டுப்பாட்டு பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரம்

Published On 2020-07-09 09:28 GMT   |   Update On 2020-07-09 09:28 GMT
கடலூரில் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கடலூர்:

கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 1,379 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில் 930 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பி உள்ளனர். இந்த வைரஸ் பரவலை தடுக்க மாவட்டத்தில் 78 இடங்கள் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதிகளில் மாவட்ட நிர்வாகம் மூலம் தீவிர தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்த வகையில் கடலூர் தாலுகாவில் மொத்தம் உள்ள 45 வார்டுகளில், 25 கட்டுப்பாட்டு பகுதிகள் உள்ளன. இந்த கட்டுப்பாட்டு பகுதிகளில் தினசரி நகராட்சி நிர்வாகம் சார்பில் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் முன்கள பணியாளர்கள் மூலம் கட்டுப்பாட்டு பகுதிகளில் வசித்து வரும் பொதுமக்கள் அனைவருக்கும் கபசுர குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

இது தவிர வீடு வீடாக சென்று யாருக்காவது சளி, காய்ச்சல், இருமல் அறிகுறி உள்ளதா என பரிசோதித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று கடலூர் சின்னப்பன் தெருவில் வசிக்கும் ஒருவர், ஆணைக்குப்பம் போலீஸ் குடியிருப்பை சேர்ந்த ஒருவர், வெள்ளிமோட்டான் தெருவில் வசிக்கும் 2 பேர், தேவனாம்பட்டினம் கபிலன் நகரை சேர்ந்த ஒருவர், செல்லாங்குப்பத்தை சேர்ந்த 2 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அந்த பகுதிகள் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, பிளிச்சீங் பவுடர் போடப்பட்டு சுத்தப்படுத்தும் பணி நடைபெற்றது. மேலும் அந்த பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லாத வகையில், முன்கள பணியாளர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Tags:    

Similar News