செய்திகள்
ஆட்டோ டிரைவர்களுக்கு கொரோனா தடுப்பு ஆலோசனை கூட்டம்

சிதம்பரத்தில் ஆட்டோ டிரைவர்களுக்கு கொரோனா தடுப்பு ஆலோசனை கூட்டம்

Published On 2020-07-08 12:23 GMT   |   Update On 2020-07-08 12:23 GMT
கொரோனா வைரஸ் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆட்டோ டிரைவர்களுக்கான ஆலோசனை கூட்டம் சிதம்பரத்தில் நடைபெற்றது.
சிதம்பரம்:

சிதம்பரம் நகர காவல்துறை சார்பில், கொரோனா வைரஸ் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆட்டோ டிரைவர்களுக்கான ஆலோசனை கூட்டம் சிதம்பரத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமை தாங்கினார். நகர இன்ஸ்பெக்டர் முருகேசன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் கூறுகையில், சிதம்பரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. ஆட்டோ டிரைவர்கள் அதிக பயணிகளை ஏற்றக்கூடாது. ஆட்டோக்களில் 2 பேருக்கு மேல் ஏற்றக்கூடாது. டிரைவர்கள் கட்டாயம் முககவசம் அணிந்திருக்க வேண்டும். மேலும் கிருமிநாசினி வைத்திருக்க வேண்டும்.

அதுபோல் மீன் மார்க்கெட் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்ற அவர்களுக்கு ஆட்டோ டிரைவர்கள் அறிவுரை வழங்க வேண்டும். பொதுமக்கள் அனைவரும் மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கைக்கு ஒத்துழைத்தால் மட்டுமே கொரோனா வைரஸ் பரவலை தடுக்கலாம் என்றார்.

இதில் சிதம்பரம் நகர தி.மு.க. துணை செயலாளர் மார்க்கெட் பாலசுப்பிரமணியன், வர்த்தக சங்க தலைவர் சதீஷ் மற்றும் ஆட்டோ டிரைவர்கள், காய்கறி வியாபாரிகள், மீன் மார்க்கெட் ஒப்பந்ததாரர்கள், வர்த்தக சங்கத்தினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News