செய்திகள்
கலியமூர்த்தி

திருமணம் செய்து வைக்காத தந்தையை கொலை செய்த மகன்

Published On 2020-07-02 11:05 GMT   |   Update On 2020-07-02 11:05 GMT
ஆண்டிமடம் அருகே திருமணம் செய்து வைக்காத தந்தையை கொலை செய்த மகனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஆண்டிமடம்:

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே கொங்குநாட்டர் குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சக்கரவர்த்தி (வயது 70) விவசாயக் கூலித் தொழிலாளி. இவருக்கு மூன்று மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். மூத்த மகன் ஒருவருக்கும், 2 மகளுக்கும் சக்கரவர்த்தி திருமணம் செய்து வைத்துள்ளார். இந்நிலையில் மீதமுள்ள 2 மகன்களுக்கும் திருமணம் செய்து வைக்க சக்கரவர்த்தியால் முடிய வில்லை.

இதில் 3-வது மகன் கலியமூர்த்தி(36) வெல்டிங் வேலை செய்து வருகிறார். திருமணமாகாத விரக்தியால் கலியமூர்த்தி வேலை செய்து கிடைக்கும் பணத்தை அவ்வப்போது குடி போதைக்கு செலவு செய்து விட்டு, தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு தந்தை சக்கரவர்த்தியிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் கலியமூர்த்தி வெளியில் சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி வந்த போது திண்ணையில் தூங்கி கொண் டிருந்த சக்கரவர்த்தியை எழுப்பி தகராறு செய்தார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு முற்றியது.

இதனால் ஆத்திரமடைந்த கலியமூர்த்தி அருகில் கிடந்த மண்வெட்டியை எடுத்து சக்கரவர்த்தியின் தலையில் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி யோடினார்.

இதில் பலத்த காயமடைந்த சக்கரவர்த்தி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது தொடர்பாக ஆண்டிமடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த கலியமூர்த்தியை நேற்று கைது செய்து ஜெயங்கொண்டம் கிளை சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News