செய்திகள்
கலெக்டர் இன்னசென்ட் திவ்யா

நீலகிரி மாவட்டத்தில் 16 ஆயிரம் பேரிடம் சளி மாதிரி சேகரிப்பு - கலெக்டர் தகவல்

Published On 2020-07-01 14:24 GMT   |   Update On 2020-07-01 14:24 GMT
நீலகிரி மாவட்டத்தில் இதுவரை 16 ஆயிரம் பேரிடம் சளி மாதிரி சேகரிக்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்.
ஊட்டி:

நீலகிரி மாவட்டத்தில் 84 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்தது. இதில் 32 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையில் 26 பேரும், கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் 26 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொற்று உறுதியான நபர்கள் வசித்து வந்த பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகிறது. நாளுக்குநாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுடன் முதல் நிலை, இரண்டாம் நிலை தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து சுகாதாரத்துறையினர் சளி மாதிரி எடுத்து பரிசோதனைக்காக ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்து வருகின்றனர். நீலகிரியில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது.

இதையடுத்து தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் வசித்து வருகிறவர்களுக்கு கொரோனா பரிசோதனை அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. இதுகுறித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறியதாவது:-

தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் ஈரோடு மாவட்டத்திற்கு அடுத்தபடியாக நீலகிரி மாவட்டம் உள்ளது. தினமும் 600-க்கும் மேற்பட்ட நபர்களிடம் இருந்து சளி மாதிரி எடுத்து பரிசோதனைக்கு அனுப்பப்படுகிறது. இதுவரை 16 ஆயிரம் பேரிடம் சளி மாதிரி சேகரிக்கப்பட்டு உள்ளது. தொற்று அதிகமாக பரவி வருவதால் 2 இடங்கள் கிளஸ்டராக அறிவிக்கப்பட்டு உள்ளது. கொரோனா அறிகுறி கண்டறியப்பட்ட தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்த அனைவருக்கும் மாதிரி எடுக்கப்பட்டு வருகிறது. அவசிய தேவை இருந்தால் மட்டும் இ-பாஸ் பெற விண்ணப்பிக்க வேண்டும்.

குன்னூர் வெலிங்டன் பகுதியில் ஒருவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. அவர் கொரோனா பாதிப்பால் இறக்கவில்லை. அவர் உடல் நலக்குறைவால் இறந்து உள்ளார். ராணுவ பகுதி என்பதால் அத்துறையின் பாதுகாப்பு வழிகாட்டுதலின்படி முழு பாதுகாப்பு கவச உடை அணிந்து உடல் அடக்கம் நடந்தது. இதை சமூக வலைத்தளத்தில் தவறாக பதிவிட்ட ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதேபோல் யாரேனும் வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News