செய்திகள்
இரட்டை கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்களை படத்தில் காணலாம்.

அண்ணன் - தம்பி வெட்டிக்கொலை : 10 பேருக்கு ஆயுள் தண்டனை

Published On 2020-07-01 07:17 GMT   |   Update On 2020-07-01 07:17 GMT
அண்ணன்-தம்பி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 10 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கடலூர் கோர்ட்டு உத்தரவிட்டது.
கடலூர்:

கடலூர் மாவட்டம் ரெட்டிச்சாவடி போலீஸ் நிலைய தெருவை சேர்ந்தவர் ரமேஷ். இவருடைய மகன்கள் வினோத்குமார் (வயது 21), சதீஷ்குமார்(19). வினோத்குமாருக்கும் அதே பகுதியை சேர்ந்த செங்கேணி மகன் லட்சுமணன் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இதுதொடர்பாக அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டு வந்தது.

கடந்த 2016-ம் ஆண்டு மே மாதம் வினோத்குமார் வீட்டுக்கு சிலர் வந்து தங்கினர். இதுபற்றி அறிந்த லட்சுமணன், தன்னை கொலை செய்யத் தான் வினோத்குமார் சதித்திட்டம் தீட்டுகிறார் என நினைத்தார். பின்னர் அவர் கடந்த 21.5.2016 அன்று தனது ஆதரவாளர்கள் சேர்ந்து சதீஷ்குமாரை அரிவாளால் வெட்டி கொலை செய்தார். இருப்பினும் ஆத்திரம் தீராத லட்சுமணன், வீடு முழுவதும் வினோத்குமாரை தேடினார். அப்போது அங்குள்ள குளியலறையில் குளித்துக் கொண்டிருந்த வினோத்குமாரையும் அவர்கள் வெட்ட முயன்றனர். இதில் பதறிய அவர் வீட்டில் இருந்து வெளியேறி தெருவில் ஓடினார். ஆனால் லட்சுமணன் உள்ளிட்டோர் ஓட ஓட விரட்டிச் சென்று வினோத்குமாரை வெட்டிக் கொலை செய்தனர்.

இந்த இரட்டைக்கொலை தொடர்பாக கடலூர் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் போலீசார் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிவடைந்ததையடுத்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில் நீதிபதி செந்தில்குமார் தனது தீர்ப்பில், லட்சுமணனுக்கு 2 ஆயுள் தண்டனையும், ரூ.7,500 அபராதமும், டேவிட், பாலமுருகன், சவுந்தர்ராஜன், அருண்குமார், சதீஷ், ஆனந்தராஜ், ராஜ்குமார், கணபதி, சுமன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.4500 அபராதமும் விதித்தார். அரசு தரப்பில் வக்கீல் பாஸ்கர் ஆஜராகி வாதாடினார்.
Tags:    

Similar News