செய்திகள்
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கண்காணிப்பு சிறப்பு அதிகாரி ககன்தீப்சிங்பேடி தலைமையில் ஆய்வுக்கூட்டம்

கொரோனா குறித்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் - சிறப்பு அதிகாரி ககன்தீப்சிங்பேடி

Published On 2020-06-27 19:53 IST   |   Update On 2020-06-27 19:53:00 IST
கொரோனா குறித்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என்று சிறப்பு அதிகாரி ககன்தீப்சிங்பேடி கூறினார்.
கடலூர்:

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கண்காணிப்பு சிறப்பு அதிகாரி ககன்தீப்சிங்பேடி தலைமை தாங்கினார். கலெக்டர் அன்புசெல்வன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாவட்ட கண்காணிப்பு சிறப்பு அதிகாரி ககன்தீப்சிங்பேடி பேசியதாவது:-

தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் நோய் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. வருகிற 2 மாதங்களுக்கு பொதுமக்கள் தங்களை தானே பாதுகாத்துக்கொள்ள தனி மனித இடைவெளியை பின்பற்றிட வேண்டும். அனைவரும் முக கவசம் அணிய வேண்டும். கைகழுவும் பழக்கத்தினை அதிகப்படுத்திக்கொள்ள வேண்டும். வணிகர்கள் மற்றும் வியாபாரிகள் நோய் தொற்றை கட்டுப்படுத்த கிருமி நாசினிகள், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.

கடலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் குறித்து போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் 64 பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வெளி மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக்கொண்டு கொரோனா பரவலை கட்டுப்படுத்த வேண்டும். மேலும் கொரோனா வைரஸ் குறித்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம். அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளித்திட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகிருபாகரன், கூடுதல் கலெக்டர் ராஜகோபால் சுங்கரா, சப்-கலெக்டர்கள் பிரவின்குமார் (விருத்தாசலம்), விசுமகாஜன்(சிதம்பரம்), கடலூர் கோட்டாட்சியர் ஜெகதீஸ்வரன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

Similar News