செய்திகள்
கொரோனா வைரஸ் பரிசோதனை

கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி. ஊழியர் உள்பட 72 பேருக்கு கொரோனா

Published On 2020-06-24 16:48 IST   |   Update On 2020-06-24 16:48:00 IST
கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி. ஊழியர் உள்பட 72 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடலூர்:

கடலூர் மாவட்டத்தில் ஏற்கனவே 821 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 489 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பி உள்ளனர். மேலும் 5 பேர் பலியாகி உள்ளனர். இந்த நிலையில் நேற்று சிலரது உமிழ்நீர் பரிசோதனை முடிவு வந்தது. இதில் 72 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு:-

சென்னையில் வேலை பார்த்து வந்த பரங்கிப்பேட்டையை சேர்ந்த 9 பேர், மங்களூரை சேர்ந்த 5 பேர், புவனகிரி, விருத்தாசலம் ஆகிய பகுதிகளை சேர்ந்த தலா ஒருவர், குமராட்சி, அண்ணாகிராமத்தை சேர்ந்த தலா 2 பேர், கடலூரை சேர்ந்த 10 பேர், காட்டுமன்னார்கோவிலை சேர்ந்த 12 பேர், என்.எல்.சி. குடியிருப்பு பகுதிகளை சேர்ந்த 7 பேர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு திரும்பினர். இவர்களிடம் இருந்து உமிழ்நீர் எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் மேற்கண்ட 49 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

இதேபோல் ஓசூர், திருச்சியில் இருந்து கடலூர் வந்த தலா ஒருவர், சிங்கப்பூரில் இருந்து கடலூர், விருத்தாசலம், குறிஞ்சிப்பாடி ஆகிய பகுதிகளுக்கு வந்த தலா ஒருவர், பஞ்சாப்பில் இருந்து கீரப்பாளையம் வந்த ஒருவர், டெல்லியில் இருந்து விருத்தாசலம் வந்த ஒருவர், ராஜஸ்தான், ஐதராபாத்தில் இருந்து என்.எல்.சி. குடியிருப்புக்கு வந்த 3 பேர், கேரளாவில் இருந்து குமராட்சிக்கு வந்த ஒருவர், என்.எல்.சி. குடியிருப்புக்கு வந்த 2 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது.

இதுதவிர கடலூரை சேர்ந்த 2 பேர் சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். அப்போது அவர்களுக்கு உமிழ்நீர் பரிசோதனை செய்ததில், 2 பேருக்கும் தொற்று இருப்பது உறுதியானது. இதேபோல் கொரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்த என்.எல்.சி. ஊழியர் 2 பேருக்கும், குமராட்சி, புவனகிரியை சேர்ந்த தலா ஒருவர், வடலூர், அண்ணாகிராமத்தை சேர்ந்த தலா 2 பேருக்கும் தொற்று இருப்பது உறுதியானது.

இவர்கள் அனைவரும் கடலூர், சிதம்பரம், விருத்தாசலம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 893 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் 1,261 பேருடைய உமிழ்நீர் பரிசோதனை முடிவு வரவேண்டியுள்ளது. நேற்று மட்டும் 17 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீமுஷ்ணத்தில் 27 வயதுடைய வாலிபர், 27 வயதுடைய பெண், இவருடைய 3 வயது மகன் என 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து 3 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே 27 வயது பெண், நேற்று காலை இந்தியன் வங்கிக்கும், அருகில் உள்ள காய்கறி கடைக்கும் சென்று வந்துள்ளார். இதனால் அந்த காய்கறி கடையை மூடுமாறு சுகாதாரத்துறையினர் உத்தரவிட்டதையடுத்து அந்த கடை மூடப்பட்டது. மேலும் இந்தியன் வங்கிக்கும் சென்று வந்ததால், வங்கி இன்றும்(புதன்கிழமை), நாளையும்(வியாழக்கிழமை) மூடப்படுவதாக வங்கி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Similar News