செய்திகள்
அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்னா

அரியலூர் மாவட்டத்தில் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து பயன் பெறலாம் - கலெக்டர் ரத்னா

Published On 2020-06-22 14:40 GMT   |   Update On 2020-06-22 14:40 GMT
அரியலூர் மாவட்டத்தில் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து பயன்பெறலாம் என்று மாவட்ட கலெக்டர் ரத்னா தெரிவித்துள்ளார்.
அரியலூர்:

விவசாயிகளுக்கு எதிர் பாராமல் ஏற்படும் இழப்புகளுக்கு நிதியுதவி வழங்கி பாதுகாக்கவும், பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும், அதிநவீன தொழில் நுட்பங்களை கடைப்பிடிப்பதை ஊக்குவிக்கவும் அரசு சார்பில் பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம் 2016-17-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2020-ம் ஆண்டில் அரியலூர் மாவட்டத்தில் குறுவை நெற்பயிர் மற்றும் இதர காரீப் பருவ பயிர்களை பிரதமரின் திருந்திய பயிர் காப்பீடு திட்டத்தின்கீழ் காப்பீடு செய்ய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தை அக்ரிகல்சர் இன்சூரன்ஸ் கம்பெனி இந்தியா லிமிடெட் நிறுவனம் செயல்படுத்துகிறது. அரியலூர் மாவட்டத்தில் நெல் 74 வருவாய் கிராமங்களிலும், மக்காச்சோளம் 73 வருவாய் கிராமங்களிலும், துவரை 5 வருவாய் கிராமங்களிலும், உளுந்து 82 வருவாய் கிராமங்களிலும், கடலை 140 வருவாய் கிராமங்களிலும், வாழை 8 வருவாய் கிராமங்களிலும், வெங்காயம் 9 வருவாய் கிராமங்களிலும், மரவள்ளிக்கிழங்கு 9 வருவாய் கிராமங்களிலும், மஞ்சள் ஒரு வருவாய் கிராமத்திலும், சோளம் 7 குறுவட்டங்களிலும், கம்பு 4 குறுவட்டங்களிலும் மற்றும் எள் 5 குறுவட்டங்களிலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

காரீப் பருவத்தில் குறுவை நெல் பயிரிடும் விவசாயிகள் மற்றும் இதர காரீப் பருவ பயிர்களான மக்காச்சோளம், துவரை, உளுந்து, கடலை, சோளம், கம்பு, எள், வெங்காயம் மற்றும் மஞ்சள் பயிர்களை பயிரிடும் விவசாயிகள் அடுத்த மாதம் ஜூலை 31-ந் தேதிக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் வாழை மற்றும் மரவள்ளிக்கிழங்கு பயிரிடும் விவசாயிகள் வருகிற ஆகஸ்டு மாதம் 31-ந் தேதிக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும். பயிர் காப்பீட்டு தொகையில் வேளாண் பயிர்களுக்கு 2 சதவீதம் மட்டும் விவசாயிகள் செலுத்தினால் போதுமானது. அந்த வகையில் நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.655, இதர காரீப் பருவ பயிர்களான மக்காச்சோளத்திற்கு ரூ.380, துவரைக்கு ரூ.256, உளுந்துக்கு ரூ.256, கடலைக்கு ரூ.421, சோளத்திற்கு ரூ.217, கம்புக்கு ரூ.210 மற்றும் எள் பயிருக்கு ரூ.189-ம் காப்பீடு கட்டணமாக செலுத்த வேண்டும். மேலும் தோட்டக்கலை பயிர்களுக்கு பயிர் காப்பீடு தொகையில் 5 சதவீதம் மட்டும் விவசாயிகள் செலுத்தினால் போதுமானது. அந்த வகையில் வாழைக்கு ரூ.3 ஆயிரத்து 65, வெங்காயத்திற்கு ரூ.ஆயிரத்து 710, மரவள்ளிக்கிழங்கிற்கு ரூ.ஆயிரத்து 388 மற்றும் மஞ்சள் பயிருக்கு ரூ.3 ஆயிரத்து 175-ம் ஒரு ஏக்கருக்கு காப்பீடுக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

காரீப் பருவம் 2020-ம் ஆண்டில் கடன் பெறும் விவசாயிகள் விருப்பக்கடிதம் அளித்து விருப்பத்தின் பெயரில் கடன் பெறும் வங்கியில் காப்பீடு செய்துகொள்ளலாம். கடன் பெறாத விவசாயிகள் பொது சேவை மையங்கள் மூலமாகவோ, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவோ முன்மொழிவு படிவம் அளித்து பயிருக்கான பிரீமியம் செலுத்தி காப்பீடு செய்துகொள்ளலாம்.

இத்திட்டத்தின்கீழ் பதிவு செய்யும் போது முன்மொழிவு விண்ணப்பத்துடன், பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அதிகாரி வழங்கும் அடங்கல், வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து பிரீமியத் தொகையை செலுத்தியபின் அதற்கான ரசீதையும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், பொது சேவை மையங்கள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் பெற்றுக்கொள்ளலாம். மேற்கண்ட திட்டங்கள் தொடர்பாக எழும் சந்தேகங்களுக்கு சம்பந்தப்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகி பயன் பெறலாம்.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார். 
Tags:    

Similar News