செய்திகள்
கைது

மணல் கடத்திய 7 பேர் கைது

Published On 2020-06-21 11:40 IST   |   Update On 2020-06-21 11:40:00 IST
மணல் கடத்திய 7 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கீழப்பழுவூர்:

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சாத்தமங்கலம் கிராமத்தில் முன்பு இயங்கி வந்த மணல் இருப்பு வைப்பு இடத்தில் இருந்து மணல் கடத்தப்படுவதாக கீழப்பழுவூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று அதிகாலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது 2 டிராக்டர் மற்றும் இரு சக்கர வாகனத்தில் சிலர் மணல் கடத்திக்கொண்டு இருந்தது தெரிந்தது. இதையடுத்து அந்த வாகனங்களை கைப்பற்றிய போலீசார் மணல் கடத்திய மேலவண்ணம் கிராமத்தை சேர்ந்த குணசேகரன் மகன் உதயகுமார்(வயது 19), திருவையாறை சேர்ந்த சவுந்தர்ராஜன்(36) மற்றும் கள்ளூர் கிராமத்தை சேர்ந்த ஜெயக்குமார்(33) ஆகிய 3 பேரை கைது செய்து அரியலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதேபோல் பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள வி.களத்தூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் தலைமையிலான போலீசார் நேற்று வி.களத்தூர் கல்லாற்று பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் மாட்டு வண்டியில் மணல் அள்ளிக்கொண்டு இருந்த வி.களத்தூரை சேர்ந்த ரமேஷ்(31), நடராஜ்(25), ராமையா(50), முத்துசாமி(53) ஆகிய 4 பேரையும் போலீசார் பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து அவர்கள் மணல் அள்ள பயன்படுத்திய மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News