செய்திகள்
கொரோனா வைரஸ்

புதுக்கோட்டையில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 87 ஆக உயர்வு

Published On 2020-06-19 15:39 IST   |   Update On 2020-06-19 15:39:00 IST
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 87 ஆக உயர்ந்துள்ளது. இதில் 42 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து வீடு திரும்பினர்.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டையில் சென்னையில் இருந்து வந்த 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் பொன்னமராவதி, ஏம்பல், ஆதனக்கோட்டை ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் ஆவர். இவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக புதுக்கோட்டை ராணியார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் புதுக்கோட்டையை சேர்ந்த 20 வயதுடைய இளம்பெண் கோவையில் தொற்று உறுதி செய்யப்பட்டு கோவையிலேயே சிகிச்சை பெற்று வருகிறார்.

இதேபோல் கறம்பக்குடி அருகே உள்ள கொங்கரகோட்டை கிராமத்தை சேர்ந்த 29 வயது வாலிபர் நேற்று முன்தினம் வெளிநாட்டில் இருந்து சொந்த ஊர் திரும்பினார். அவருக்கு விமான நிலையத்தில் செய்யப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியானதையடுத்து, வீட்டில் தனிமையில் இருந்தார். இந்நிலையில் அந்த வாலிபரை சுகாதாரத்துறையினர் ஆம்புலன்ஸ் மூலம் புதுக்கோட்டை ராணியார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அந்த கிராமத்தில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, கொரோனா அறிகுறி குறித்து தகவல்கள் சேகரிக்கப்பட்டது.

இதன்மூலம் புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 87 ஆக உயர்ந்துள்ளது. இதில் 42 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து வீடு திரும்பினர். 43 பேர் சிகிச்சையில் உள்ளனர். ஒருவர் பலியானார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Similar News