செய்திகள்
முக கவசம்

முக கவசம் அணியாதவர்களிடம் ரூ.11 லட்சம் அபராதம் வசூல்

Published On 2020-06-18 16:13 GMT   |   Update On 2020-06-18 16:13 GMT
முக கவசம் அணியாதவர்களிடம் இருந்து மொத்தம் ரூ.11 லட்சத்து 17 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டு உள்ளது.
திண்டுக்கல்:

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. இதை மீறி திண்டுக்கல் மாவட்டத்தில் முக கவசம் அணியாதவர்கள், சாலையில் எச்சில் துப்பும் நபர்களுக்கு தலா ரூ.100 அபராதம் விதிக்கும்படி கலெக்டர் விஜயலட்சுமி உத்தரவிட்டார். இதையடுத்து சுகாதார பணிகள் துணை இயக்குனர் ஜெயந்தி அறிவுரையின் பேரில் சுகாதாரத்துறையினர், உள்ளாட்சித்துறையினருடன் சேர்ந்து மாவட்டம் முழுவதும் கிராம பகுதிகளில் சோதனை நடத்தி வருகின்றனர்.

அதன்படி திண்டுக்கல் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முகமதுகமாலுதீன் தலைமையிலான அதிகாரிகள் நேற்று திண்டுக்கல் அருகே பெரியகோட்டை, ம.மு.கோவிலூர், செட்டிநாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சோதனை நடத்தினர். அப்போது முக கவசம் அணியாமல் சென்றவர்களை பிடித்து அபராதம் விதித்ததோடு, இலவசமாக முக கவசங்கள் வழங்கினர். மேலும் முக கவசத்தை சட்டை பையில் கழற்றி வைத்து கொண்டு வந்தவர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. இதில் 185 பேருக்கு தலா ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டது.

இதேபோல் மாவட்டம் முழுவதும் சுகாதாரத்துறையினர் மற்றும் உள்ளாட்சித்துறையினர் இணைந்து கிராமங்களில் சோதனை நடத்தி முக கவசம் அணியாத நபர்களை பிடித்து அபராதம் விதித்து வருகின்றனர். அந்த வகையில் மாவட்டம் முழுவதும் இதுவரை 11 ஆயிரத்து 170 பேருக்கு தலா ரு.100 அபராதம் விதிக்கப்பட்டு இருக்கிறது. இதன்மூலம் மொத்தம் ரூ.11 லட்சத்து 17 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News