செய்திகள்
கொரோனா வைரஸ் பரிசோதனை

திருப்பூரில் 3 போலீசார் உள்பட 53 பேருக்கு கொரோனா பரிசோதனை

Published On 2020-06-18 21:33 IST   |   Update On 2020-06-18 21:33:00 IST
திருப்பூரில் 3 போலீசார் உள்பட 53 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
திருப்பூர்:

கொரோனா வைரசின் காரணமாக பல நாடுகளில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஏற்கனவே 4 கட்ட ஊரடங்கு விதிக்கப்பட்டிருந்தது.

தற்போது 5-வது கட்ட ஊரடங்கு வருகிற 30-ந் தேதி வரை விதிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கின் காரணமாக பல்வேறு நடைமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களும் பாதுகாப்பாக இருக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு கடந்த மாதம் குறைந்திருந்தது. தற்போது மீண்டும் பாதிப்பு ஏற்பட தொடங்கியுள்ளது.

வெளிநாடுகள், வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களில் இருந்து வருகிறவர்கள் மூலம் கொரோனா தொற்று பரவும் அபாயம் திருப்பூருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் திருப்பூர் மாவட்டத்தில் தினமும் பலருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நேற்று திருப்பூர் மாநகரத்தை சேர்ந்த 50 வயது ஆண், 33 வயது பெண், 44 வயது ஆண் ஆகிய 3 போலீசார் உள்பட 53 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சந்தேகத்தின் பேரில் இவர்களுக்கு இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

திருப்பூரில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர்பில் இருந்தவர்கள் மற்றும் வெளிபகுதிகளில் இருந்து திருப்பூர் மாவட்டத்திற்கு வந்தவர்கள் என பலருக்கும் கொரோனா பரிசோதனை செய்து வருகிறோம். அதன்படி நேற்று 3 போலீசார் உள்பட 53 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அவர்களின் சளி மற்றும் ரத்த மாதிரியும் சேகரிக்கப்பட்டுள்ளது.

சந்தேகத்தின் பேரிலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் இவர்களுக்கு இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. விரைவில் இது தொடர்பான முடிவுகள் தெரியவரும். இதில் கொரோனா தொற்று உறுதி செய்யப்படுகிறவர்கள் மேல்சிகிச்சைக்காக கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்படுவார்கள்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Similar News