செய்திகள்
திருமயத்தில், பாறையில் வரையப்பட்டுள்ளஓவியங்கள்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் வரலாற்று சிறப்பு மிக்க இடங்களில் ஆய்வு செய்ய தொல்லியல் துறை அனுமதி

Published On 2020-06-18 17:57 IST   |   Update On 2020-06-18 17:57:00 IST
புதுக்கோட்டை மாவட்டத்தில் வரலாற்று சிறப்பு மிக்க இடங்களில் ஆய்வு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கீரமங்கலம்:

புதுக்கோட்டை மாவட்டத்தில் கல்வெட்டுகள், நினைவு சின்னங்கள், புதைவிடங்கள் அதிகளவில் உள்ளன. இதற்கு உதாரணமாக, பல ஆண்டுகளை கடந்த பொற்பனைக்கோட்டையை சொல்லலாம். அதேபோல, பழமையான கற்கோடாரி, குறியீடுகளுடன் கூடிய கருப்பு சிவப்பு மண் பாண்டங்கள், குடுவைகள். முதுமக்கள் தாழிகள், நிறைந்துள்ள வில்வன்னி ஆற்றங்கரையில் உள்ள மங்களநாடு வடக்கு அம்பலத் திடலை கூறலாம். மேலும், திருமயம் அருகில் உள்ள மலையடிப்பட்டியில் கற்காலத்தை சேர்ந்த கல் பதுக்கைகள், கல்வட்டங்கள் காணப்படுகிறது. கண்ணனூரில் நெடுங்கல் காணப்படுகிறது. குடுமியான்மலை, திருமயத்தில் செங்கோட்டு ஓவியங்கள், மலையடிப்பட்டி பாறை கிண்ணங்கள் இதையெல்லாம் கடந்து குகை, குடைவரை, கற்றளிகள், நிறைந்து காணப்படுகின்றன. இதுவரை புதைவிடங்கள் அதிகம் காணப்பட்டாலும் அதற்கான வாழ்விடங்களை கண்டுபிடிக்க முடியவில்லை.

இவ்வாறு வரலாற்று சிறப்பு மிக்க இடங்களில் தொல்லியல் ஆய்வுகள் மேற்கொண்டு தமிழர்களின் வரலாற்றை உலகளவில் பதிவு செய்ய வேண்டும் என்று தொல்லியல் ஆய்வாளர்களும், சமூக ஆர்வலர்களும் மத்திய, மாநில தொல்லியல் துறைக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்த வண்ணம் இருந்தனர். தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழக வரலாற்று துறை உதவி பேராசிரியர் இனியனும் கோரிக்கை விடுத்திருந்தார். அதன் அடிப்படையில் மாவட்டம் முழுவதும் முதல்கட்டமாக ஆய்வு செய்ய இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையின் அனுமதி அவருக்கு கிடைத்துள்ளதாகவும், கொரோனா தொற்று வீரியம் குறைந்த பிறகு பல்கலைக்கழக அனுமதி பெற்று கள ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து உதவி பேராசிரியர் இனியன் கூறுகையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் வரலாற்று சிறப்பு மிக்க இடங்களில் ஒருசில இடங்கள் மட்டும் பாதுகாக்கப்பட்டுள்ளது. மற்ற இடங்கள் பாதுகாக்கப்படவில்லை. இங்குள்ள இடங்களில் அகழாய்வு செய்ய மத்திய தொல்பொருள் துறையிடம் அனுமதி கேட்டிருந்தேன். முதல்கட்டமாக மாவட்டம் முழுவதும் மேலாய்வு செய்து அதில் எந்த இடம் அகழாய்வு செய்ய சரியான இடம் என்பதை அறிக்கையாக கேட்டுள்ளனர்.

அதன் அடிப்படையில், கொரோனா பிரச்சினை முடிந்தபிறகு ஆய்வுகள் செய்ய தயாராக இருக்கிறோம். அந்த ஆய்வில் கீழடியில் பயன்படுத்தப்பட்ட அறிவியல் தொழில்நுட்பத்துடன் கூடிய ஜி.பி.ஆர். கருவிகளையும் பயன்படுத்த இருக்கிறோம். அந்த அறிக்கைக்கு பிறகு மத்திய தொல்பொருள் துறை அனுமதிக்கும் இடத்தில் அகழாய்வு செய்யப்படும் என்றார்.

Similar News