செய்திகள்
ராணுவ உடையில் பழனி, அவருடைய தம்பி இதயக்கனியுடன், தங்கை சீதா (பழைய படம்)

நான் ராணுவத்தில் சேர என் அண்ணனே எனக்கு முன்மாதிரி- பழனியின் தம்பி பேட்டி

Published On 2020-06-18 14:29 IST   |   Update On 2020-06-18 14:29:00 IST
“நான் ராணுவத்தில் சேர என் அண்ணனே எனக்கு மாதிரியாக இருந்தார்“ என்று லடாக்கில் வீரமரணம் அடைந்த பழனியின் தம்பி இதயக்கனி உருக்கமாக கூறினார்.
தொண்டி:

இந்தியா-சீனா எல்லையில் லடாக் பகுதியில் நடந்த தாக்குதலில் ராமநாதபுரம் மாவட்டம் கடுக்கலூர் கிராமத்தை சேர்ந்த ராணுவ வீரர் பழனி பலியானார். இவருடைய தங்கை சீதா, தம்பி இதயக்கனி. இவரும் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார்.

தன்னுடைய அண்ணன் நாட்டுக்காக செய்த உயிர்த்தியாகம் குறித்து இதயக்கனி நிருபர்களிடம் கூறியதாவது:-

எனது குடும்பம் சாதாரண விவசாய குடும்பம். எனது சகோதரர் பழனி கடந்த 1999-ம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்தார். இளம் வயதில் விளையாட்டில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். 12-ம் வகுப்பு வரையில் படித்த அவர் நாட்டிற்காக பாடுபட வேண்டும் என்று ராணுவத்தில் சேர்ந்தார்.

கிட்டத்தட்ட 22 ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றியவர் கடந்த 1½ ஆண்டுகளாக இந்தியா-சீனா எல்லையில் லடாக் பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்து வந்தார். ராமநாதபுரத்தில் புதிதாக வீடுகட்டிய அவர் கடந்த ஜனவரி மாதம் வீட்டிற்கு நிலை வைப்பதற்காக வந்திருந்தார். ஆனால் நான் ராணுவத்தில் இருந்த நிலையில் அவரை பார்க்கவில்லை. கடந்த 3-ந் தேதி அவரது புதிய வீட்டிற்கு குடிபெயர்வதற்கு கூட அவருக்கு விடுப்பு கிடைக்காத நிலையில் வரமுடியவில்லை. நான் தான் வந்திருந்தேன். அன்று தான் அவரிடம் கடைசியாக செல்போனில் பேசினேன்.

அவரை முன்மாதிரியாக கொண்டு நானும் ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றி வருகிறேன். எனக்கு அவர் தான் ராணுவத்தில் சேர உரிய பயிற்சி அளித்தார். அவர் இன்று நாட்டின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உயிரிழந்துள்ளது எங்கள் குடும்பத்திற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.

ஆனால் நாட்டின் பாதுகாப்பிற்காக எனது சகோதரர் வீரமரணம் அடைந்ததை பெருமையாக கருதுகிறோம். என் அண்ணனின் தியாகம் போற்றத்தக்கது. தமிழக அரசு அனைத்து உதவிகளையும் செய்து தருவதாக அறிவித்துள்ளது. அதற்காக எங்கள் குடும்பத்தினர் சார்பில் தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

தேசத்தின் பாதுகாப்பிற்காக உயிரிழந்துள்ள எனது சகோதரர் நினைவாக எங்கள் சொந்த ஊரில் அவருக்கு தமிழக அரசின் சார்பில் நினைவு சின்னம் அமைக்க வேண்டும். இதுகுறித்து மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். இதனை நிறைவேற்றித்தரவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News