செய்திகள்
வீடு தீ விபத்து

கீழ்வேளூர் அருகே 4 கூரை வீடுகள் எரிந்து சாம்பல்

Published On 2020-06-15 15:20 IST   |   Update On 2020-06-15 15:20:00 IST
கீழ்வேளூர் அருகே 4 கூரை வீடுகள் எரிந்து சாம்பலானது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிக்கல்:

நாகை மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த கொளப்பாடு அருகே உள்ள முத்தரசபுரத்தை சேர்ந்த சிலர் கொளப்பாடு ஊராட்சிக்குட்பட்ட ஆண்டிபாளையம் சோழவித்தயாறு கரைகளில் நேற்று காலை தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதிகளில் இருந்த மூங்கில் மரங்கள், கருவேல மரங்களை தீவைத்து கொளுத்தினர். அப்போது காற்று வேகமாக வீசியதால் அந்த பகுதியில் உள்ள ஜெயபிரகாஷ், நாகரத்தினம், பாஸ்கர், கற்பகம் ஆகிய 4 பேரின் கூரை வீடுகளுக்கும் தீப்பரவி கொழுந்து விட்டு எரிந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்து தலைஞாயிறு தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து மேலும் தீ பரவாமல் அணைத்தனர். இருப்பினும் 4 வீடுகளும் முற்றிலும் எரிந்து சாம்பலானது.

இந்த தீவிபத்தில் வீடுகளில் இருந்த அனைத்து வீட்டு உபயோக பொருட்களும் எரிந்து சேதம் அடைந்தன. இதன்சேத மதிப்பு பல லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

இதுகுறித்து வலிவலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தீவிபத்து பற்றி அறிந்த திருக்குவளை தாசில்தார் சாந்தி, தலைமையிடத்து துணை தாசில்தார் சுதர்சன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து தீவிபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அரசு நிவாரணமாக தலா ரூ.5 ஆயிரம் வழங்கினர். அப்போது வருவாய் ஆய்வாளர் புனிதா, கிராம நிர்வாக அலுவலர் மணிமாறன், தலைஞாயிறு ஒன்றிய தலைவர் ஆர்.ஜி.தமிழரசி, கொளப்பாடு ஊராட்சி மன்ற தலைவர் அசோக்குமார், ஊராட்சி மன்ற துணை தலைவர் பாலாஜி உடனிருந்தனர்.

Similar News