காஞ்சிபுரத்தில் வசிக்கும் 2½ லட்சம் பேருக்கு கபசுர குடிநீர்- கலெக்டர் தகவல்
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் பிள்ளையார் பாளையம் கிருஷ்ணன் தெருவில் உள்ள பள்ளியில் பொது மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனை மாவட்ட கலெக்டர் பொன்னையா தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-
காஞ்சிபுரத்தில் உள்ள 51 ஆயிரம் வீடுகளில் 2 லட்சத்து 32 ஆயிரத்து 816 பேர் வசித்து வருகின்றனர். கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் அவர்கள் அனைவருக்கும் முதலில் வெப்பமானி மூலம் உடல் வெப்பம் பரிசோதனை நடத்தப்படும்.
இதன் பின்னர் அனைவருக்கும் கபசுர குடிநீர் வழங்கப்படும். மேலும் கொரோனா நோய் தொற்று அறிகுறி இருக்கிறதா? என்பது பரிசோதிக்கப்படும். அறிகுறி இல்லாதவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை தரக்கூடிய சத்து மாத்திரைகள் வழங்கப்படும்.
மாவட்டத்தில் இதுவரை தினசரி 100 பேர் வீதம் 6,700 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 515 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. 206 பேர் மட்டுமே ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்ற அனைவரும் குணம் அடைந்து விட்டனர்.
மாவட்டத்தில் குன்றத்தூரில் மட்டும் 330 பேருக்கு கொரோனா தொற்று உள்ளது. காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் 62 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.