செய்திகள்
ஜார்கண்ட் மாநிலத்துக்கு செல்வதற்காக ஈரோடு ரெயில் நிலையத்துக்கு வந்திருந்த பெண்கள்.

ஈரோட்டில் இருந்து ஜார்கண்ட் மாநிலத்துக்கு 1,103 பேர் ரெயிலில் புறப்பட்டனர்

Published On 2020-06-09 16:30 GMT   |   Update On 2020-06-09 16:30 GMT
ஈரோட்டில் இருந்து ஜார்கண்ட் மாநிலத்துக்கு 1,103 பேர் ரெயிலில் புறப்பட்டு சென்றனர்.
ஈரோடு:

கொரோனா ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் தங்கியிருக்கும் வடமாநில தொழிலாளர்கள் வேலை இன்றி சிரமப்பட்டு வருகிறார்கள். அவர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் தங்கியிருந்த ஏராளமான தொழிலாளர்கள் பல்வேறு சிறப்பு ரெயில்கள் மூலமாக அவர்களது மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல விண்ணப்பித்து இருந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்பூரில் இருந்து ஜார்கண்ட் மாநிலத்துக்கு ஒரு சிறப்பு ரெயில் புறப்பட்டது. அந்த ரெயிலில் இடமில்லாததால் ஈரோட்டில் தங்கியிருந்தவர்கள் அனுப்பி வைக்கப்படவில்லை.

இந்தநிலையில் ஈரோட்டில் இருந்து ஜார்கண்ட் மாநிலத்துக்கு நேற்று சிறப்பு ரெயில் இயக்கப்பட்டது. இதில் ஈரோட்டில் தங்கியுள்ள 543 பேர் ஈரோடு ரெயில் நிலையத்துக்கு வந்தனர். இதேபோல் திருப்பூர், கோவை, கரூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இருந்தும் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஈரோட்டுக்கு வேன், பஸ்களில் அழைத்து வரப்பட்டனர்.

மொத்தம் 1,103 பேர் சிறப்பு ரெயிலில் ஜார்கண்ட் மாநிலத்துக்கு புறப்பட்டு சென்றனர். முன்னதாக ஈரோடு ரெயில் நிலையத்தில் விண்ணப்பம் சரிபார்த்தல், மருத்துவ பரிசோதனை உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், வடமாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் வழங்கப்பட்டன.
Tags:    

Similar News