செய்திகள்
முதுமலை

முதுமலை வனப்பகுதியில் பசுமை திரும்பியது

Published On 2020-06-03 13:55 GMT   |   Update On 2020-06-03 13:55 GMT
கூடலூர் மற்றும் முதுமலை பகுதிகளில் கோடை மழை பெய்து வருவதால் வனப்பகுதியில் உள்ள 40க்கும் மேற்பட்ட நீர்நிலைகளில் தண்ணீர் நிறைந்து காணப்படுகிறது. இதன் காரணமாக வனப்பகுதி பசுமைக்கு திரும்பி உள்ளது.
நீலகிரி:

தமிழகம், கர்நாடகம் மற்றும் கேரளா மாநிலங்கள் இணையும் இடத்தில் இருக்கும் முதுமலை, நீலகிரியின் அடர்ந்த வனப்பகுதிகளால் சூழப்பட்டுள்ளது. 1940 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட முதுமலை வனவிலங்கு சரணாலயம் மிகவும் புகழ்வாய்ந்தது. தென்னிந்தியாவில் வனவிலங்குகள் அதிகம் வாழும் இடம் என்கிற பெருமை இதற்கு உண்டு,

சிறுத்தை, காட்டெருமை, பல வகை மான்கள், காட்டு யானைகள், காட்டுப்பன்றிகள், குள்ளநரி போன்றவை இங்கு வாழ்கின்றன. கபினி ஆற்றின் பல துணை ஓடைகளும் அவற்றை ஒட்டியுள்ள மேய்ச்சல் நிலங்களும் இந்த காட்டில் வசிக்கும் விலங்குகளுக்கான உணவுக்கேந்திரமாக விளங்குகின்றன. சில அரிய வகை பறவைகளான கரிச்சான் குருவிகள், காட்டுக்கோழிகள், கவுதாரி, மயில், மயிற்கோழி மற்றும் புறாக்களுடன் பருந்து, வல்லூறு, போன்றவையும் இங்கு காணப்படுகின்றன.

தாவர வகைகளில் சந்தன மரம் , கருங்காலி மரம் மற்றும் தேக்கு மரங்கள் இந்த வனப்பகுதியில் மிகுதியாக காணப்படுகின்றன. பெரிய மரங்களும் புதர்க்காடுகளும் நிறைந்து காணப்படும் இந்த வனப்பகுதி இங்குள்ள விலங்குகளுக்கு இயற்கையான வாழ்விடமாய் அமைந்துள்ளது. ஊர்வன விலங்குகளில் கரு நாகம், விரியன், சாரை, கட்டு விரியன் மற்றும் பலவிதமான பல்லி வகைகள், பச்சோந்திகள் முதுமலை வனப்பகுதியில் பெருமளவில் வசிக்கின்றன.

கூடலூர் மற்றும் முதுமலை பகுதிகளில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை கடுமையாக வெயில் அடித்தது. இதனால் முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் வறட்சி நிலவியது. இங்கு காட்டுயானைகள், காட்டெருமைகள், மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகளுக்கு பசுந்தீவன தட்டுப்பாடு ஏற்பட்டது. மேலும் நீர்நிலைகள் வறண்டுவிட்டதால் தீவனம் மற்றும் தண்ணீரை தேடி வனவிலங்குகள் ஊருக்குள் படையெடுக்க தொடங்கின.

இதற்கிடையில் வனத்துக்குள் அமைக்கப்பட்டுள்ள தொட்டிகளில் லாரிகள் மூலம் வனத்துறையினர் தண்ணீர் ஊற்றி வனவிலங்குகளின் தாகத்தை தணித்து வந்தனர். எனினும் தீவன தட்டுப்பாட்டால் வனவிலங்குகள் இடம் பெயர்ந்து சென்றன. இதனால் முதுமலையில் வனவிலங்குகளின் நடமாட்டம் குறைவாக காணப்பட்டது. இது தவிர காட்டுயானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் முதுமலை புலிகள் காப்பக எல்லையில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்து பயிர்களை தின்று அட்டகாசம் செய்தன. மேலும் குடியிருப்புகளையும் சேதப்படுத்தின. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். ஏற்கனவே ஊரடங்கு உத்தரவால் வருமானமின்றி அவதிப்பட்ட அவர்களுக்கு, இது மேலும் பெரிய தலைவலியாக அமைந்தது.

இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக கூடலூர் மற்றும் முதுமலை பகுதிகளில் கோடை மழை பெய்து வருகிறது. சில நேரங்களில் பலத்த மழையும் கொட்டுகிறது. இதன் காரணமாக முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் உள்ள 40க்கும் மேற்பட்ட நீர்நிலைகளில் தண்ணீர் நிறைந்து காணப்படுகிறது. இதன் காரணமாக வனப்பகுதி பசுமைக்கு திரும்பி உள்ளது.

இதைத்தொடர்ந்து இடம்பெயர்ந்து சென்ற வனவிலங்குகள் மீண்டும் முதுமலை வனப்பகுதிக்கு வர தொடங்கி உள்ளன. இதன் காரணமாக அங்குள்ள சாலையோரங்களில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து இருப்பதை காண முடிகிறது.

குறிப்பாக யானை மற்றும் மான்கள், மயில்கள் கூட்டம் கூட்டமாக சாலையோரங்களில் உள்ள புல்வெளிகளில் மேய்வதை அதிகமாக காண முடிகிறது.

Tags:    

Similar News