செய்திகள்
பேருந்து

கடலூர் மாவட்டத்தில் கூடுதலாக 200 பஸ்கள் இயக்க திட்டம்

Published On 2020-05-30 14:54 GMT   |   Update On 2020-05-30 14:54 GMT
கடலூர் மாவட்டத்தில் கூடுதலாக 200 அரசு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடலூர்:

கடலூர் மாவட்ட போக்குவரத்து மண்டலத்துக்கு 11 டெப்போக்கள் உள்ளது. இந்த டெப்போக்களில் இருந்து 608 பஸ்கள் மாவட்டம் முழுவதும் மற்றும் வெளி மாவட்டங்களுக்கும் இயக்கப்பட்டு வந்தது.

கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக மார்ச் 24-ந் தேதி முதல் நாளை வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ளது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் போக்குவரத்து தடைபட்டது. இதனால் கடலூர் மாவட்டத்திலும் பஸ்கள் இயங்கவில்லை. நாளை ஊரடங்கு உத்தரவு முடிகிறது.

கடந்த 15-ந் தேதி 3-ம் கட்ட ஊரடங்கு முடியும் தருவாயில் இருந்தபோது கடலூர் மாவட்டத்தில் அனைத்து பஸ்களும் இயங்க தயார் செய்யப்பட்டிருந்தது. ஆனால் கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு எந்த தளர்வுகளும் இல்லை ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என்று அறிவித்ததால் பஸ்கள் இயங்கவில்லை.

ஜூன் 1-ந் தேதி தமிழக அரசு பஸ்களை இயக்க உத்தரவிட்டால் கடலூர் மாவட்டத்தில் பஸ்களை இயக்க முன்னேற்பாடு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஜூன் 1-ந் தேதி பஸ்கள் இயங்கினால் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.

இதன் அடிப்படையில் கடலூர் மாவட்டத்தில் கூடுதலாக 200 அரசு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் கடலூரில் இருந்து செல்லும் பஸ்கள் அனைத்திலும் 40-க்கும் மேற்பட்டோர் செல்கின்றனர். இதன் காரணமாக கூடுதல் பஸ் இயக்கினால் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து பாதுகாப்பாக பயணம் செய்வார்கள்.

கடலூர் மாவட்டத்தில் அதிக பயணிகள் ஏறும் 25 பஸ் நிறுத்தங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த பஸ் நிறுத்தங்களில் போக்குவரத்து ஊழியர் ஒருவர் பணி அமர்த்தப்பட்டு கூட்டும் அதிகமாக இருந்தால் கூடுதல் பஸ் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இதையடுத்து பஸ் டிரைவர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு போதிய அளவில் ஓய்வு அளிக்கப்பட்டு சுழற்சி முறையில் பணி அமர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் அரசு உத்தரவிட்டால் கடலூர் மாவட்டத்தில் முக்கிய பகுதிகளான நெய்வேலி, விருத்தாசலம், வடலூர், பண்ருட்டி, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் ஆகிய பகுதிகளில் இருந்து சென்னைக்கு பஸ்கள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஏற்கனவே பஸ்கள் அனைத்தும் கிருமிநாசினி தெளித்து அவ்வப்போது பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருவதால் பஸ்கள் தயார் நிலையில் உள்ளது. மேலும் அரசு அறிவிப்பு வந்த உடன் டிரைவர் மற்றும் நடத்துனர்கள் பணிக்கு வர தயாராக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேற்கண்டதகவலை போக்குவரத்து அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News