செய்திகள்
ஆர்.எஸ்.பாரதி

ஆர்.எஸ். பாரதியின் இடைக்கால ஜாமீனை ரத்து செய்ய ஐகோர்ட் மறுப்பு

Published On 2020-05-30 10:02 GMT   |   Update On 2020-05-30 10:02 GMT
வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை தள்ளுபடி செய்யக் கோரிய மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சென்னை:

திமுக அமைப்பு செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதியை கடந்த 23ம் தேதி மத்திய குற்றப்பிரிவு  போலீசார் கைது செய்தனர். தாழ்த்தப்பட்ட மக்களை அவமதிக்கும் வகையில் பேசியதாக அளித்த புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டார். அவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

விசாரணைக்குப் பின்னர் அவர் எழும்பூர் நீதிமன்ற நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, ஆர்.எஸ்.பாரதிக்கு மே 31ம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். ஆர்.எஸ்.பாரதி பேசியது பற்றிய வழக்கு ஐகோர்ட்டில் விசாரணையில் இருப்பதை காரணம் காட்டி இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது.

ஆனால், ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை ரத்து செய்யக் கோரி மத்திய குற்றப்பிரிவு போலீஸ் தரப்பில் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதேசமயம், சரண் அடையும் நாளிலேயே தனது ஜாமீன் மனுவை பரிசீலிக்க கோரி ஆர்.எஸ்.பாரதி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த இரண்டு மனுக்களும் நீதிபதி நிர்மல் குமார் முன் விசாரணைக்கு வந்தன.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, மீனுக்கள் மீதான தீர்ப்பை ஒத்திவைத்திருந்தார். அதன்படி இன்று நீதிபதி தீர்ப்பு வழங்கினார். அப்போது, ஆர்.எஸ்.பாரதியின் ஜாமீனை ரத்து செய்ய மறுத்த நீதிபதி, ஜாமீனை ரத்து செய்யக்கோரி காவல்துறை தரப்பில் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

தனக்கு எதிரான வழக்குகளை சேர்த்து விசாரிக்க உத்தரவிடக் கோரியும், தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக் கோரியும் ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணை ஜூன் 10 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News