செய்திகள்
ஆனந்தவாடி கிராமத்தில், கழுத்தில் கயிற்றை மாட்டி விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்ட போது எடுத்த படம்.

வேலை வழங்கக்கோரி கழுத்தில் கயிற்றை மாட்டி விவசாயிகள் நூதன போராட்டம்

Published On 2020-05-30 15:30 IST   |   Update On 2020-05-30 15:30:00 IST
அரசு சிமெண்டு ஆலைக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வழங்கக்கோரி கழுத்தில் கயிற்றை மாட்டி விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செந்துறை:

அரியலூரில் உள்ள அரசு சிமெண்டு ஆலைக்கு ஆனந்தவாடி கிராமத்தில் சுரங்கம் உள்ளது. இங்கு சுண்ணாம்புக் கல் சுரங்கம் அமைப்பதற்காக கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு 161 விவசாயிகளிடம் இருந்து 270 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. அப்போது நிலம் கொடுத்த அவர்களுக்கு சிமெண்டு ஆலையில் வேலை வழங்கப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆனால், இது நாள் வரை நிலம் கொடுத்த ஆனந்தவாடி விவசாயிகளுக்கு வேலை வழங்கப்படவில்லை. இதுதொடர்பாக பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதனால், விரக்தி அடைந்த நிலம் கொடுத்த விவசாயிகள், தற்போது விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள அரியலூர் அரசு சிமெண்டு ஆலையில் வெளி மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு வேலை வழங்கி வருவதாக குற்றம் சாட்டியதோடு தங்களுக்கு முன்னுரிமை கொடுத்து வேலை வழங்க வேண்டும் என்று கோரி ஆனந்தவாடியில் உள்ள சுண்ணாம்புக்கல் சுரங்கம் முன்பு சாலையை மறித்து பந்தல் அமைத்து தங்களது கழுத்தில் தூக்கு கயிறை மாட்டியவாறு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகளின் இந்த போராட்டம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News