செய்திகள்
விபத்து

குத்தாலம் அருகே ஆற்றில் டிராக்டர் கவிழ்ந்து விபத்து- வாலிபர் படுகாயம்

Published On 2020-05-28 15:11 IST   |   Update On 2020-05-28 15:11:00 IST
குத்தாலம் அருகே ஆற்றில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் வாலிபர் படுகாயம் அடைந்தார். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குத்தாலம்:

தஞ்சை மாவட்டம் திருபுவனத்தில் இருந்து காரைக்கால் நோக்கி டிராக்டரில் செங்கல் ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தனர். இந்த வாகனத்தை காரைக்கால் சொரக்குடி வடக்குத்தெரு செல்வராஜ் மகன் கோவிந்தராஜ் (வயது 48) என்பவர் ஓட்டி வந்துள்ளார். அவருடன் கல்யாணசுந்தரம், விக்னேஷ் மற்றும் அன்பரசன் ஆகியோர் சென்றுள்ளனர்.

நச்சினார்குடி என்ற இடத்தில் சென்றபோது நிலைதடுமாறி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் வீரசோழன் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டிராக்டர் டிப்பர் மேல் பயணம் செய்த அன்பரசனுக்கு இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டது. உடனே அவர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதைத்தொடர்ந்து, அவர் மேல்சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த பாலையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுதேவி மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News