செய்திகள்
ஆம்புலன்ஸ் - கோப்புப்படம்

கொரோனா பீதியால் ஆம்புலன்சில் கொண்டுவந்த வாலிபர் உடலை புதைக்க ஊர் மக்கள் எதிர்ப்பு

Published On 2020-05-28 07:48 GMT   |   Update On 2020-05-28 07:48 GMT
கொரோனா பீதியால் உடல்நலக் குறைவால் இறந்த வாலிபரின் உடலை புதைக்க எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் மீண்டும் நடந்துள்ளது.
செங்கல்பட்டு:

சென்னையில் கடந்த மாதம் கொரோனாவால் உயிரிழந்த டாக்டரின் உடலை புதைக்க எதிர்ப்பு தெரிவித்து, சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது உடலை கொண்டு வந்த ஆம்புலன்சு மீது கல்வீச்சும் நடந்தது. இது தொடர்பாக 14 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் உடல்நலக்குறைவால் இறந்த வாலிபரின் உடலை புதைக்க எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் மீண்டும் நடந்துள்ளது.

அசாம் மாநிலத்தை சேர்ந்த நஜ்மல் (வயது 25) என்பவர் திருப்போரூரில் தங்கி அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். ஊரடங்கு காரணமாக அவர் அறையிலேயே முடங்கியிருந்தார். கடந்த வாரம் அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

அவரை உடனடியாக செங்கல்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு கொரோனா பரிசோதனையும் செய்யப்பட்டது. இதில் அவருக்கு நோய் தொற்று எதுவுமில்லை. சிறுநீரக பாதிப்பு இருந்ததாக தெரிகிறது.

இதற்கிடையே நேற்று முன்தினம் உடல்நிலை மோசமடைந்த நஜ்மல் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுபற்றி அவரது குடும்ப த்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் நஜ்மலின் உடலை செங்கல்பட்டு அருகே திருமணி பகுதியில் உள்ள பெத்தேல் நகர் சுடுகாட்டில் புதைக்க ஆம்புலன்சில் எடுத்துச் சென்றனர்.

சுடுகாடு அருகே ஆம்புலன்ஸ் வந்து நின்றதும், அப்பகுதி மக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டு வந்தனர். அவர்கள் கொரோனாவால் இறந்த நோயாளியை புதைக்க எடுத்து வந்திருப்பதாக நினைத்து, கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இறந்த வாலிபருக்கு கொரோனா தொற்று இல்லை என்பதை தெரிவித்தனர். எனினும் நஜ்மல் உடலை அங்கு புதைக்க தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப் பட்டது.

இதையடுத்து, செங்கல்பட்டு டவுனில் உள்ள முஸ்லிம்கள் உடல் அடக்கப்படும் இடத்தில் நஜ்மலின் உடல் கொண்டு செல்லப்பட்டு புதைக்கப்பட்டது.
Tags:    

Similar News