செய்திகள்
மேட்டூர் அணை

மேட்டூர் அணை தண்ணீர் திறப்பு: திருச்சி-புதுக்கோட்டையில் குடிமராமத்து பணிகள் தீவிரம்

Published On 2020-05-25 11:42 GMT   |   Update On 2020-05-25 11:42 GMT
மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்காக ஜூன் 12-ந்தேதி தண்ணீர் திறக்கப்படுவதால் திருச்சி, புதுக்கோட்டை மாவட்டத்தில் குடிமராமத்து பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
புதுக்கோட்டை:

மேட்டூர் அணையில் இருந்து இந்தாண்டு குறுவை சாகுபடிக்காக வருகிற ஜூன் 12-ந்தேதி தண்ணீர் திறக்கப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். இந்தநிலையில் காவிரி நீர் கடைமடை வரை செல்லும் வகையில் தூர்வாரும் பணிகளும் குடிமராமத்து பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதை கண்காணிக்க புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களுக்கு சிறப்பு அதிகாரிகளை தமிழக அரசு நியமித்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ள உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் அபூர்வா, கலெக்டர் உமாமகேஸ்வரி மற்றும் அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார். குடிமராமத்து பணி நடக்க திட்டமிடப்பட்டுள்ள கவிநாடு கண்மாய் பகுதியில் ஆளில்லா விமானம் மற்றும் டிரோன் கேமரா வாயிலாக அவர் ஆய்வு மேற்கொண்டார்.

காவிரி நீர் பாயும் பகுதிகளில் 43 சிறு குளங்கள், ஏரிகள் ஆகியவை ரூ.23கோடி மதிப்பில் குடிமராமத்து பணிகள் நடந்து வருகிறது. ரூ.2 கோடி மதிப்பீட்டில் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் வருகிற ஜூன் 10-ந்தேதிக்குள் முடிவடையும் என்ற நோக்கத்தில் பணிகள் நடைபெற்று வருகிறது.

தமிழகத்திலேயே முதல் முறையாக புதுகை மாவட்டத்தில் ஆளில்லா விமானம் மற்றும் டிரோன் வாயிலாக தூர்வாரும் பணிகள் ஆய்வு செய்யப்படுகிறது.

வாய்க்கால்கள், கண்மாய்கள் தூர்வாருவதற்கு முன்பும், தூர்வாரிய பின்பும் எவ்வாறு உள்ளது என்பது குறித்தும் கணக்கிடப்படும். மேலும் காவிரி நீர் வந்தவுடன் நிலத்தடி நீர் எவ்வளவு உயர்ந்துள்ளது என்பது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தோடு இணைந்து இந்த ஆய்வு பரீட்சார்த்த முறையில் நடைபெற்று வருகிறது. இந்த முயற்சி வெற்றி பெற்றால் அனைத்து பகுதிகளிலும் இதேப்போல் செய்வதற்கு அரசிடம் பரிந்துரைக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

திருச்சி மாவட்டத்தில் பொதுப்பணித்துறை மூலம் மொத்தம் 20 பணிகள், சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ் மேற்கொள்ள ரூ.1.76 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 53.24 கி.மீ. நீளத்துக்கு வாய்க்கால்கள், வடிகால்கள் தூர்வாரப்பட உள்ளன.

இதில் ஒரு பணியாக அந்த நல்லூர் ஊராட்சி ஒன்றியம் மேக்குடியில் உள்ள கோட்டை வடிகால் வாய்க்கால் ரூ.9 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பீட்டில் 3.60 கி.மீ. நீளத்துக்கு பொக்லைன் எந்திரம் மூலம் தூர்வாருவதற்கான பணி தொடங்கியது. மாவட்ட கலெக்டர் சிவராசு தலைமை தாங்கினார். அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் பணியை தொடங்கி வைத்தனர்.

கோட்டை வடிகால் வாய்க்கால் பிச்சாவரம் கிராமத்தில் தொடங்கி மேக்குடி, பழூர் வழியாக சுமார் 4 கி.மீ. தொலைவு சென்று கொடிங்கால் வடிகாலில் கலக்கிறது. ராமவாத்தலை மற்றும் புதுவாத்தலை பிரதான வாய்க்காலில் இருந்து பிரியும் கிளை வாய்க்கால்களின் உபரிநீரும், மழைநீரும் ஒன்றாக சேர்ந்து கோட்டை வடிகால் வாய்க்காலில் கிடைக்க பெறுகிறது.

இந்த கோட்டை வடிகால் வாய்க்கால் மேடுகளாகவும், செடி, கொடிகள் முளைத்தும் உள்ளதால் மழை தண்ணீர் முழுவதும் வடிகாலின் இருபக்கமும் வழிந்து சென்று நெற்பயிர்களுக்கு சேதத்தினை ஏற்படுத்துகிறது. ஆகவே, வடிகாலில் உள்ள மண்திட்டுகள், செடி, கொடிகளை அகற்றி, கரைகளை பலப்படுத்தி வடிகாலை அகலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

அடுத்த மாதம்(ஜூன்) 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க அரசு அறிவித்துள்ளது. அவ்வாறு திறக்கப்படும் தண்ணீர் திருச்சி மாவட்டத்திற்கு வருவதற்கு 20-ந் தேதி ஆகிவிடும். அதற்குள் தூர்வாரும் பணி நிறைவடைந்து விடும், என்று கலெக்டர் சிவராசு தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை ஆற்றுப் பாதுகாப்பு கோட்ட செயற்பொறியாளர் பாஸ்கர், உதவி செயற்பொறியாளர் கண்ணன், உதவி பொறியாளர் ராஜரத்தினம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Tags:    

Similar News