செய்திகள்
கோடை வெயில்

புதுச்சேரியில் நேற்று 106 டிகிரி வெயில் பதிவானது

Published On 2020-05-21 07:04 GMT   |   Update On 2020-05-21 07:04 GMT
புதுச்சேரியில் நேற்று 106.16 டிகிரி வெயில் பதிவானது. மேலும் அனல் காற்றும் வீசியது.
புதுச்சேரி:

இந்த ஆண்டு கோடை காலம் முன்பே புதுச்சேரியில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 4-ந் தேதி அக்னி நட்சத்திரம் என்ற கத்திரி வெயில் தொடங்கியது. பொதுவாக இந்த காலகட்டத்தில் வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும். இந்த கத்திரி வெயில் வருகிற 28-ந் தேதி வரை நீடிக்கிறது.

நடப்பாண்டு கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக அரசு ஊரடங்கு பிறப்பித்துள்ளது. இதனால் நகரப்பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் வாகன போக்குவரத்துகள் சற்று குறைந்து காணப்படுகிறது. இதனால் வெப்பத்தின் தாக்கம் பெரிதாக பொதுமக்களுக்கு தெரியவில்லை. ஆனால் வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடப்பதால் வீடுகளில் மின்விசிறிகள், ஏ.சி., பிரிட்ஜ் உள்ளிட்ட மின்சாதனங்களின் பயன்பாடுகளும் அதிகரித்து உள்ளது.

இதற்கிடையில் அணேணம்பன் புயல் காரணமாக புதுவையில் கடந்த சில தினங் கள் முன்பு அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்தது. இந்த நிலையில் புதுவையில் நேற்று முன்தினம் வெயில் கொளுத்தியது. அன்றைய தினம் வெயில் 103 டிகிரியாக பதிவானது. அதேபோல் நேற்று அதைவிட அதிகமாக 106.16 டிகிரியாக வெயில் பதிவானது. மேலும் அனல் காற்றும் வீசியது. இருசக்கர வாகனங்களில் சென்றவர்களில் பெரும்பாலானவர்கள் ஹெல்மெட், தொப்பி, கண்ணாடி உள்ளிட்டவற்றை அணிந்தபடி சென்றனர். பெண்கள் முகத்தை துணியால் சுத்திக்கொண்டு சென்றனர்.

Tags:    

Similar News