காட்டுமன்னார்கோவில் அருகே மோட்டார் சைக்கிளில் மது கடத்திய 2 பேர் கைது
ஸ்ரீமுஷ்ணம்:
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுபடி தமிழகம் முழுவதும் நேற்று டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. அதன்படி காட்டுமன்னார்கோவில் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளும் திறக்கப்பட்டன.
நேற்று மதியம் 1 மணியளவில் சாராய வியாபாரிகளான லால்பேட்டையை சேர்ந்த விஜி (வயது 39), கொல்லாபுரம் பகுதியை சேர்ந்த செல்வம் (28) ஆகியோர் மோட்டார் சைக்கிளில் சென்றனர்.
அப்போது ரோந்து சென்ற காட்டுமன்னார்கோவில் இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையிலான போலீசார் அவர்கள் 2 பேரையும் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளில் பதிவு எண் இல்லாமல் இருந்தது. கிடுக்கிப்பிடி விசாரணையில், அரசு டாஸ்டாக் கடையில் கூடுதல் பணம் கொடுத்து பெட்டி பெட்டியாக மதுப்பாட்டில்களை கடத்தி வந்துள்ளனர். இதனை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. 2 பேரையும் போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர்கள் 2 பேரையும் நீதிபதி சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.