செய்திகள்
தீ விபத்து

கடலூர் அருகே ரெயில்வே மரக்கிடங்கில் தீ விபத்து

Published On 2020-05-16 15:05 IST   |   Update On 2020-05-16 15:05:00 IST
கடலூர் அருகே ரெயில்வே மரக்கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்து சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:

கடலூர் அருகே நெல்லிக்குப்பம் ஆலை ரோட்டில் ரெயில் நிலையம் உள்ளது. இந்த ரெயில் நிலையம் அருகே வெளியூர்களிலிருந்து சர்க்கரை சவுக்கு கட்டை போன்றவற்றை இறக்குவதற்கு தனியாக சிமெண்ட் தளம் உள்ளது. இங்கு ரெயில்வே துறைக்கு சொந்தமாக ஒரு லட்சம் மதிப்பிலான மரக்கட்டைகள் இருந்தது.

நேற்று மாலை 4 மணி அளவில் திடீரென்று மரக்கட்டைகளில் இருந்து புகை மண்டலமாக காட்சி அளித்தது. பின்னர் மளமளவென தீ பரவி, மரக்கட்டைகள் முழுவதும் எரிய தொடங்கியதால் தீப்பிழம்பாக காட்சியளித்தது.

இதனை தொடர்ந்து நெல்லிக்குப்பம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சுமார் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

நெல்லிக்குப்பம் ரெயில் நிலையம் பகுதியில் மின்சார ரெயில் இயக்குவதற்கு மின்கம்பிகள் அமைக்கப்பட்டிருந்தது. இந்த திடீர் தீ விபத்தால் மின் பாதை முழுவதும் பாதிப்பு ஏற்பட்டு விடுமோ? என்ற அச்சத்தில் அந்த பகுதி மக்கள் மற்றும் ரெயில்வே துறையினர் மத்தியில் பெரும் பீதி ஏற்பட்டது.

Similar News