செய்திகள்
கோப்புப்படம்

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு நடந்து செல்ல வேண்டாம்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

Published On 2020-05-16 13:51 IST   |   Update On 2020-05-16 13:51:00 IST
தமிழகத்தில் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு நடந்து செல்ல வேண்டாம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
சென்னை:

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வெளிமாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்து பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர்களை அவர்கள் விருப்பத்தின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட மாநில அரசின் அனுமதியுடன் அந்தந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்க அனைத்து விதமான ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது.

இதுவரை 55,473 வெளி மாநில தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட மாநிலங்களின் ஒப்புதலுடன் 43 ரெயில்களில் பீகார், ஒடிசா ஜார்கண்ட், ஆந்திரா, மேற்குவங்காளம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். சுமார் 10ஆயிரம் வெளி மாநில தொழிலாளர்களை சம்பந்தப்பட்ட மாநிலங்களின் ஒப்புதலுடன் அனுப்பி வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

வெளிமாநில தொழிலாளர்கள் தம் மாநிலங்களுக்கு செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும், ரெயில்வே கட்டணம் உட்பட அனைத்து பயணச் செலவுகளையும் தமிழக அரசே ஏற்றுக்கொள்வதால் வெளிமாநில தொழிலாளர்கள் தன்னிச்சையாக நடைபயணமாகவோ, பிற வாகனங்களின் மூலமாகவோ, செல்ல வேண்டாம்.

வெளிமாநில தொழிலாளர்கள் தற்போது தங்கியிருக்கும் முகாம்களிலேயே தொடர்ந்து இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

Similar News