செய்திகள்
சென்னை ஐகோர்ட்

புலம்பெயர் தொழிலாளர்களை பாதுகாக்க மாநில அரசுகள் தவறிவிட்டன- சென்னை ஐகோர்ட் வேதனை

Published On 2020-05-16 07:39 GMT   |   Update On 2020-05-16 07:39 GMT
புலம்பெயர் தொழிலாளர்களை பாதுகாக்க மாநில அரசுகள் தவறி விட்டதாக சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.
சென்னை:

கொரோனா ஊரடங்கால் மகாராஷ்டிர மாநிலத்தில் சிக்கித் தவிக்கும் 400-க்கும் மேற்பட்ட தமிழர்களை மீட்க கோரி வழக்கறிஞர் சூர்யபிரகாசம், சென்னை ஐகோட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் தமிழர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல தலா 3,500 ரூபாய் செலுத்த வேண்டுமென அதிகாரிகள் கட்டாயப்படுத்துவதாக குற்றம் சாட்டியிருந்தார். 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், மலேசியாவில் சிக்கியிருப்பவர்களை மீட்க அரசு நடவடிக்கை எடுக்கும்போது மகாராஷ்டிராவில் சிக்கி இருக்கும் தமிழர்களை மீட்பதில் ஏன் தயக்கம் காட்டப்படுகிறது? என கேள்வி எழுப்பினர். மேலும் மனுவுக்கு ஒரு வாரத்தில் பதிலளிக்கும்படி தமிழக டிஜிபி, மகாராஷ்டிரா காவல்துறைக்கு உத்தரவிட்டனர்.



இந்நிலையில் இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, புலம்பெயர் தொழிலாளர்களை பாதுகாக்க மாநில அரசுகள் தவறி விட்டதாக நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.

ஒவ்வொரு மாநிலத்திலும் எத்தனை தொழிலாளர்கள் சிக்கியுள்ளனர்? மத்திய அரசும், சம்பந்தப்பட்ட மாநில அரசுகளும் என்ன உதவிகள் வழங்கியுள்ளன? புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க எடுத்த நடவடிக்கைகள் என்ன? என்பது தொடர்பாக மத்திய - மாநில அரசுகள் மே 22ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
Tags:    

Similar News