செய்திகள்
புதுச்சேரி கடைகள்

புதுவையில் கடைகள் திறப்பு நேரத்தை நீட்டிக்க திட்டம்

Published On 2020-05-15 08:41 GMT   |   Update On 2020-05-15 08:41 GMT
புதுவை வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று கடை திறப்பு நேரத்தை நீட்டித்து முதல்-அமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதுச்சேரி:

கொரோனா தொற்று பரவாமல் தடுக்க கடந்த மார்ச் 24-ந் தேதி முதல் நாடெங்கும் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்தது.

ஊரடங்கு உத்தரவு காலத்தில் மளிகை, பால், காய்கறி, மருந்தகம் ஆகிய அத்தியாவசிய கடைகளை மட்டும் திறக்க அனுமதியளிக்கப்பட்டிருந்தது. முதல் ஒரு வாரத்திற்கு மருந்தகம் தவிர அத்தியாவசிய கடைகளை காலை 6 மணி முதல் மதியம் 2.30 மணி வரை இயங்க அனுமதி வழங்கப்பட்டது.

அதிகளவில் கூட்டம் கூடியதால் காலை 6 மணி முதல் மதியம் ஒரு மணி வரை மட்டுமே அத்தியாவசிய கடைகளை திறக்க வேண்டும் என்றும், பால் விற்பனை நிலையங்களை மாலை 6 மணியோடு மூட வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில் 3-ம் கட்ட ஊரடங்கு தொடங்கிய மே 4-ந் தேதி முதல் சில தளர்வுகள் அளிக்கப்பட்டது, கள், சாராயம், மதுபான கடைகளை தவிர அனைத்து கடைகளையும் திறக்க அனுமதியளிக்கப்பட்டது.

காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை கடைகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 40 நாட்களுக்கு மேலாக கடைகள் மூடிக்கிடந்ததால் வியாபாரிகள் கடும் நஷ்டத்திற்கு ஆளாகியுள்ளனர்.

தற்போது மாலை 5 மணி வரை கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டாலும் பெரியளவில் வியாபாரம் இல்லை. கொரோனா அச்சம் ஒருபுறமிருந்தாலும் கடுமையான வெயில் மற்றொரு காரணமாக உள்ளது. இதனால் கடைகளை திறக்கும் நேரத்தை அதிகரித்து மாலையில் திறக்க அனுமதிக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை வைத்தனர்.

மாலையில் வெயிலின் தாக்கம் குறைந்து மக்கள் வெளியே வந்தால்தான் வியாபாரம் நடைபெறும் என புதுவை வியாபாரிகள் முதல்-அமைச்சர் நாராயணசாமியை சந்தித்து வலியுறுத்தினர். இதனிடையே முதல்-அமைச்சர் நாராயணசாமி, ஊரடங்கை இனியும் நீடித்தால் மக்கள் ஏற்க மாட்டார்கள். எனவே ஊரடங்கை தளர்த்த வேண்டும் என பிரதமருக்கு கடிதம் அனுப்பியிருப்பதாக கூறியுள்ளார்.

வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று கடை திறப்பு நேரத்தை நீட்டித்து முதல்-அமைச்சர் அறிவிப்பு வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாலையில் 1 மணி அல்லது 2 மணி நேரம் நீடிப்பு செய்யப்படலாம்.

4-வது கட்ட பொது முடக்கம் தொடர்பான அறிவிப்புகளை பிரதமர் வெளியிட்டதற்கு பிறகு நாராயணசாமி மாநில நிலவரங்கள் குறித்து ஆய்வு செய்து சில தளர்வுகளை அறிவிக்க திட்டமிட்டு இருக்கிறார். அப்போது கடை திறப்பு நேரத்தை நீடிப்பது குறித்தும் அறிவிப்பு வெளியாகும்.
Tags:    

Similar News