செய்திகள்
கைது

வில்லியனூர் அருகே கணவரை காரை ஏற்றி கொன்ற மனைவி-கள்ளக்காதலன் சிக்கினர்

Published On 2020-05-14 08:06 GMT   |   Update On 2020-05-14 08:16 GMT
வில்லியனூர் அருகே கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த கணவரை காரை ஏற்றி கொன்ற மனைவி, கள்ளக்காதலன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
வில்லியனூர்:

புதுவை மாநிலம் திருக்கனூர் அருகே காட்டேரி குப்பம் மருத்துவமனை வீதியை சேர்ந்தவர் கந்தசாமி (வயது41). இவர் வில்லியனூர் அருகே தொண்டமாநத்தம் அருகே உள்ள தனியார் பள்ளியில் வேன் டிரைவராக வேலை செய்து வந்தார்.

இவருக்கும் கூடப்பாக்கத்தை சேர்ந்த புவனேஸ்வரி (26) என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் 14-ந் தேதி இரவு பள்ளியில் பணி முடிந்து கந்தசாமி மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தார். பத்துக்கண்ணு பகுதியில் வந்த போது அந்த வழியாக வந்த கார் கந்தசாமி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் பலத்த காயம் அடைந்த கந்தசாமி சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பிய கந்தசாமி 2 நாளில் இறந்து போனார்.

இதுதொடர்பாக வில்லியனூர் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மற்றும் போலீசார் விபத்து வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதற்கிடையே கந்தசாமியின் தாயார் வில்லியனூர் போலீசில் புகார் செய்தார். புகாரில் தனது மகன் சாவில் சந்தேகம் இருப்பதாகவும் அவரை யாரோ திட்டமிட்டு காரை ஏற்றி கொலை செய்துள்ளதாகவும் தெரிவித்து இருந்தார். இதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் திடுக்கிடும் தகவல் தெரியவந்தது.

கந்தசாமியின் மனைவி புவனேஸ்வரிக்கும் லிங்காரெட்டி பாளையத்தை சேர்ந்த கந்தசாமியின் நண்பரான அஜித்குமார் (24) என்பவருக்கும் கள்ளக்காதல் இருந்து வந்தது தெரியவந்தது. இதனை கந்தசாமி கண்டித்ததால் ஆத்திரம் அடைந்த புவனேஸ்வரி கணவர் கந்தசாமியை கொலை செய்ய திட்டமிட்டு சம்பவத்தன்று கள்ளக்காதலனை ஏவி காரை ஏற்றி கந்தசாமியை கொலை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து வில்லியனூர் போலீசார் கொலை வழக்காக பதிவு செய்தனர். கந்தசாமியின் மனைவி புவனேஸ்வரி, கள்ளக்காதலன் அஜித் குமார் மற்றும் காரை ஏற்றி கந்தசாமியை கொலை செய்த பிரவீன் ஆகிய 3 பேரையும் தேடி வந்த நிலையில் அவர்கள் போலீசாரிடம் சிக்கினர். தற்போது குற்றவாளிகளை கைது செய்வதற்கு முன்பு அவர்களை கொரோனா பரிசோதனை செய்யவேண்டும் என்று அனைத்து போலீஸ் நிலையத்துக்கும் உத்தரவிடப்பட்டுள்ளதால் தற்போது போலீசாரிடம் சிக்கியுள்ள 3 பேரையும் கொரோனா பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்தியில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.



Tags:    

Similar News