செய்திகள்
அன்பழகன் எம்.எல்.ஏ.

புதுவையில் சரக்கு ரெயில் போக்குவரத்தை மீண்டும் தொடங்க கவர்னரிடம் அதிமுக மனு

Published On 2020-05-13 21:41 IST   |   Update On 2020-05-13 21:41:00 IST
புதுவையில் சரக்கு ரெயில் போக்குவரத்தை மீண்டும் தொடங்க வேண்டும் என்று கவர்னர், முதல்- அமைச்சர், சமூக நலதுறை அமைச்சர் ஆகியோருக்கு அன்பழகன் எம்.எல்.ஏ. மனு அனுப்பியுள்ளார்.

புதுச்சேரி:

புதுவை மாநில அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. கவர்னர், முதல்- அமைச்சர், சமூக நல துறை அமைச்சர் ஆகியோருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

புதுவை அரசின் தவறான முடிவினால் கப்பல் ஏற்றுமதி இறக்குமதியை தொடர்ந்து, சரக்கு ரெயில் மூலம் ஏற்றுமதி, இறக்குமதியும் முழுமையாக தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் மத்திய அரசின் அரிசி, பருப்பு கூட புதுவைக்கு சரக்கு ரெயில் மூலம் கொண்டு வரப்படாமல் தமிழகப் பகுதியான கண்ட மங்கலத்தோடு சரக்கு ரெயில் நிறுத்தப்பட்டது.

அங்குள்ள மத்திய அரசுக்கு சொந்தமான குடோன்களில் சரக்குகள் சேகரிக்கப்பட்டு, அங்கிருந்து லாரிகள் மூலம் புதுவைக்கு கூடுதல் செலவு செய்து கொண்டு வரப்படுகின்றன.

உப்பளம் தொகுதியில் உள்ள வாணரப்பேட்டையில் மிகப்பெரிய அளவில் மத்திய, மாநில அரசுக்கு சொந்தமான குடோன்கள் பல இருந்தும் சரக்கு ரெயில் மூலம் புதுவை ரெயில் நிலையத்திற்கு பொருட்கள் கொண்டு வர மாநில அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் பல்லாயிர கணக்கானடன் பொருட்களை சேமித்து வைக்கும் குடோன்கள் செயல் இழந்து போய் உள்ளது.

புதுவை அரசு உப்பளம் தொகுதியில் உள்ள குடோன்களில் பொருட்களை சேமித்து வைக்க புதுவை ரெயில் நிலையத்திற்கு சரக்கு போக்குவரத்து ரெயில்களை இயக்க வேண்டும். இதன் மூலம் கூடுதல் செலவு, காலதாமதமும், கால விரயமும் தவிர்க்கப்படும். நம் மாநிலத்தில் பல 100 பேருக்கு வேலை வாய்ப்பும் ஏற்படும்.

எனவே, இதில் உள்ள உண்மை நிலையை உணர்ந்து மத்திய அரசிடம் பேசி புதுவைக்கு நேரடியாக அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருட்கள் மற்றும் மாநிலத்திற்கு தேவையான பல்வேறு தளவாட பொருட்கள் வெளி மாநிலங்களில் இருந்து புதுவை ரெயில் நிலையம் வருவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Similar News