செய்திகள்
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி

ஆடு, கோழி, மீன்களை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை- கலெக்டர் எச்சரிக்கை

Published On 2020-05-12 14:15 IST   |   Update On 2020-05-12 14:15:00 IST
ஆடு, கோழி, மீன்களை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதுக்கோட்டை கலெக்டர் உமாமகேஸ்வரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக அத்தியாவசிய பொருட்கள் பொதுமக்களுக்கு தங்குதடையின்றி கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தற்பொழுது மாவட்டத்தில் ஆடு, கோழி இறைச்சிகள் மற்றும் சில அத்தியாவசிய உணவுப்பொருட்கள் விலை மிகுதியாக விற்பதாக பொதுமக்களிடமிருந்து புகார்கள் வந்துள்ளது.

எனவே மாவட்டத்தில் ஆடு, கோழி, மீன் உள்ளிட்ட இறைச்சிகள் மற்றும் அத்தியாவசிய உணவுப்பொருட்கள் உள்ளிட்ட எவற்றையும் வணிகர்கள் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு விற்பவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கென மாவட்ட நியமன அலுவலர், உணவு பாதுகாப்புத்துறை மற்றும் தொழிலாளர் நல அலுவலர் மாவட்ட காவல்துறை, நகராட்சி அலுவலர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் கடைகாரர்கள் தங்கள் கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு சமூக இடைவெளியை கடைப்பிடித்து பொருட்கள் வழங்குவதையும் கடையில் பணிபுரியும் பணியாளர்கள், முகக்கவசம், கையுறைஅணிந்து பணிபுரிவதையும் உறுதி செய்யவேண்டும்.

பொதுமக்கள் ஆடு, கோழி, மீன் உள்ளிட்ட இறைச்சிகள் மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை வணிகர்கள் அதிக விலைக்கு விற்றால் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் 99449 59595 என்ற அலைபேசி எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம். மேலும் ஆடு, கோழி, மீன் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட எவற்றையும் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Similar News