செய்திகள்
புதுவை முதலமைச்சர் நாராயணசாமி

புதுவையில் கடைகள் திறக்கும் நேரம் மாற்றி அமைக்கப்படும்- நாராயணசாமி தகவல்

Published On 2020-05-06 08:58 GMT   |   Update On 2020-05-06 08:58 GMT
ஓரிரு நாட்களில் பரிசீலனை செய்து, எந்தெந்த கடைகளை எந்த நேரத்தில் திறந்து வைத்திருக்க வேண்டும் என்பதை அரசு அறிவிக்கும் என்று புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.
புதுச்சேரி:

புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

வீதிகளில் மக்கள் அதிக கூட்டம் கூடுவதால், கடைகள் திறக்கப்படும் நேரத்தை மாற்றி அமைக்கலாமா என்பது குறித்து பேரிடர் மேலாண்மை அமைப்பின் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

வர்த்தக சபை, வணிகர் கூட்டமைப்பு, சிறு கடைகள், பெரிய கடைகள் வியாபாரிகள் அமைப்பின் தலைவர்களிடமும் பேசினேன். அரசு எடுக்கும் முடிவுக்கு ஒத்துழைப்பு தருவதாகவும், கடைகள் திறக்கும் நேரத்தை மாற்றி அமைப்பதற்கும் முழு சம்மதம் தெரிவித்தனர்.

இன்னும் ஓரிரு நாட்களில் பரிசீலனை செய்து, எந்தெந்த கடைகளை எந்த நேரத்தில் திறந்து வைத்திருக்க வேண்டும் என்பதை அரசு அறிவிக்கும். புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், மாணவர்கள் ரெயில் பயணம் செய்தால் 85 சதவீத தொகையை மத்திய அரசு தருவதாகவும், 15 சதவீதத்தை மாநில அரசு ஏற்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்காக, நன்றி தெரிவிக்கிறேன்.

ஆனால் மற்ற வாகனங்களில் வருபவர்களுக்கு உதவியை மத்திய அரசு அறிவிக்கவில்லை. இங்குள்ள புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், மாணவர்கள் பிற மாநிலங்களுக்கு செல்வதற்கும், புதுவையை சேர்ந்தவர்கள் பிற மாநிலங்களில் இருந்து வருவதற்கான தொகையை, முதல்-அமைச்சர் நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன். தமிழகத்தில் இருந்து புதுவைக்குள் வருபவர்களை தடுத்து நிறுத்த போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இனிமேலும் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்தால், கடைகள் திறக்கும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டி இருக்கும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News