செய்திகள்
டிரோன்

புதுவை எல்லைகளை கண்காணிக்க 125 டிரோன் கேமராக்கள்

Published On 2020-05-06 14:18 IST   |   Update On 2020-05-06 14:18:00 IST
டிரோன் கேமராக்கள் மூலமாக புதுவை யூனியன் பிரதேச எல்லைகளை ஒட்டுமொத்தமாக கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வருவதற்கு அரசு திட்டமிடப்பட்டுள்ளது.
புதுச்சேரி:

விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு படுவேகமாக அதிகரித்து வருவதால், பல்வேறு தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை புதுவை அரசு முடுக்கி விட்டுள்ளது.

இரு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் புதுவைக்குள் வருவதை தடுக்கும் வகையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. விழுப்புரம், கடலூர் மாவட்டங்களுடன் புதுவை பின்னிப்பிணைந்து அமைந்துள்ளது.

இந்த இரண்டு மாவட்டங்களை 82-க்கும் மேற்பட்ட பெரிய, சிறிய சாலைகள் புதுவையுடன் இணைக்கின்றன. இதுபோல, காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய பகுதிகளையும் ஏராளமான இணைப்பு சாலைகள் தமிழகம், கேரளா, ஆந்திர மாநிலங்களுடன் இணைக்கின்றன.

புதுவை யூனியன் பிரதேசம் முழுவதும் 150-க்கும் மேற்பட்ட இணைப்பு சாலைகள் உள்ளன. அனைத்து இணைப்பு சாலைகளிலும் போலீசாரை 24 மணி நேரமும் பணியில் ஈடுபடுத்தி கண்காணிப்பது பெரும் சவாலான பணியாக உருவெடுத்துள்ளது.

எனவே வருவாய்த்துறை மூலமாக டிரோன் கேமராக்களை வாங்குவது என மாநில பேரிடர் மேலாண்மை அமைப்பின் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. முதல்வர் நிவாரண நிதியை பயன்படுத்தி 125 ட்ரோன் கேமராக்களை உடனடியாக வாங்குவது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. டிரோன் கேமராக்கள் மூலமாக புதுவை யூனியன் பிரதேச எல்லைகளை ஒட்டுமொத்தமாக கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வருவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

Similar News