கடலூர்-விழுப்புரத்தை சேர்ந்தவர்கள் புதுவைக்குள் நுழையாமல் தடுக்க 84 சிறிய வழிகளை மூட அமைச்சர்கள் உத்தரவு
பாகூர்:
கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகமாகி வரும் நிலையில் புதுவையில் ஊரடங்கு தளர்வு செய்யப்பட்டுள்ளதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து நோய் பரவலை தடுத்து புதுவை மக்களை பாதுகாப்பது குறித்து ஆலோசனை கூட்டம் கிருமாம்பாக்கத்தில், அமைச்சர்கள் கந்தசாமி, மல்லாடி கிருஷ்ணராவ் ஆகியோர் தலைமையில் நடந்தது.
இந்த கூட்டத்தில், விஜயவேணி வெங்கடேசன் எம்.எல்.ஏ., மாவட்ட கலெக்டர் அருண், சுகாதார துறை செயலாளர் பிரசாத் குமார் பண்டே, இயக்குனர் மோகன்குமார், சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல் அல்வால், பாகூர் தாசில்தார் குமரன், பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் மனோகரன், போலீஸ் சூப்பிரண்டுகள் ஜிந்தா கோதண்டராமன், ரக்சனாசிங், சுப்ரமணியன் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
அதில், நோய் தொற்று அதிகமாக உள்ள கடலூர், விழுப்புரம் பகுதியை சேர்ந்தவர்களின் மூலமாக புதுவையில் பாதிப்பு ஏற்படுவதை தடுக்க என்னென்ன நடவடிக்கைககள் எடுக்கப்பட வேண்டும் என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. குறிப்பாக, கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் இருந்த புதுவைக்கு வருவதற்கு 81 வழிகள் இருப்பதாகவும், இவ்வழியாக அப்பகுதியில் இருந்து மக்கள் வருவதை தடுக்க முழுவதுமாக சீல் வைக்க வேண்டும்.
அத்தியாவசிய பொருட்கள் ஏற்றி வரும் வாகனங்கள், அவசர நிலையில் நோயாளிகளை கொண்டு செல்லும் ஆம்புலன்ஸ்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். மேலும், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் நபர்கள் யாராக இருந்தாலும் அவர்களை அனுமதிக்ககூடாது.
அவரச சிகிச்சைக்காக கடலூரில் இருந்து ஜிப்மர் செல்லும் நோயாளிகள் வழியில் வேறு எங்கும் நிற்க கூடாது. அதே போல் சிகிச்சை பெற்று முடித்த பின்னரும் வழியில் நிற்காமல் வீடு திரும்பிட வேண்டும். கரையாம்புத்தார், நெட்டப்பாக்கம் பகுதிகளில் போலீசார் பற்றாக்குறை இருப்பதால், கூடுதல் போலீசார் நியமிக்க வேண்டும், அத்தியாவசிய பொருட்கள் நேரடியாக கொள்முதல் செய்தல், கடலூர் மாவட்டத்தில் இருந்து புதுவை மாநிலத்துக்குள் வந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்கவும், கண்காணிக்கவும் அதே பகுதியை சேர்ந்த அரசு அதிகாரிகள், ஊழியர்களை ஈடுபடச்செய்வது, புதியதாக யாரும் கிராமத்துக்குள் அனுமதிக்க கூடாது என பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்தல் என பல்வேறு ஆலோசனைகள் நடத்தப்பட்டது. பின்னர் எல்லைகளை சீல் வைப்பது குறித்து போலீஸ் டி.ஜி.பி. ஸ்ரீவத்சலா பாலாஜி மற்றும் கலெக்டருடன் தனியாக அமைச்சர் கந்தசாமி ஆலோசனை நடத்தினார்.