செய்திகள்
அன்பழகன் எம்எல்ஏ

அமைச்சர் கந்தசாமி தனக்கு எதிரான அரசியலை புரிந்து கொள்ள வேண்டும்- அன்பழகன் அறிக்கை

Published On 2020-05-05 10:23 GMT   |   Update On 2020-05-05 10:23 GMT
அமைச்சர் கந்தசாமி தனது கட்சியிலும், கூட்டணி கட்சியிலும் தனக்கு எதிராக நடைபெறும் அரசியலை புரிந்து கொண்டு செயல்பட வேண்டும் என்று அன்பழகன் எம்எல்ஏ கூறியுள்ளார்.

புதுச்சேரி:

புதுவை மாநில அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மத்திய அரசால் வழங்கப்பட்ட இலவச அரிசி வினியோகம் செய்ததில் செலவினம் குறித்து தற்போது அரசு நியாயமான செலவினங்களை செய்ததாக அறிவித்துள்ளது.

இது சம்பந்தமாக இத்துறை அமைச்சர் மீது திட்டமிட்டு களங்கம் ஏற்படுத்தும் விதத்தில் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. வைத்திலிங்கம், காங்கிரசின் கூட்டணி கட்சியான தி.மு.க. எம்.எல்.ஏ. சிவா ஆகியோர் பேக்கிங் செலவிற்கு ரூ.5 கோடிக்கு மேல் செலவு செய்ததாக குற்றம் சாட்டினர்.

அவர்களைத் தொடர்ந்து அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் இக்கட்டான காலத்தில் அரிசி வினியோகம் செய்ய ரூ.7 கோடி செலவு செய்யலாமா? என கேள்வி எழுப்பினார்.

உண்மை நிலை இவ்வாறு இருக்க அமைச்சர் கந்தசாமி எதிர்க்கட்சிகள் பொய் பிரசாரம் செய்வதாக தற்போது குற்றம் சாட்டுகிறார்.

முதலில் தனது கட்சியிலும், தனது கூட்டணி கட்சியான தி.மு.க. எம்.எல்.ஏ.வின் குற்றச்சாட்டுகளை எண்ணிப்பார்க்காமல் எதிர்க்கட்சியை சாடுவது நியாயமற்ற செயலாகும். ஆட்சி அதிகாரத்தில் இருந்து கொண்டே உண்மைக்கு புறம்பான செய்திகளை திரித்து கூறுவது தி.மு.க.விற்கும், காங்கிரஸ் கட்சிக்கும் கைவந்த கலை என்பது இதன் மூலம் நிரூபணம் ஆகியுள்ளதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

தன் மீது சேற்றை வாரி பூசியதன் கட்சியைச் சேர்ந்தவர்களையும், கூட்டணி கட்சியை சேர்ந்த தி.மு.க. எம்.எல்.ஏ. செயலையும் ஏன் சமூக நலத்துறை அமைச்சரால் உணர முடியவில்லை?

இதற்கு முதல்வரின் பதில் என்ன? தனது அமைச்சரைப்பற்றி, தன்கட்சியில் உள்ளவர்களும், கூட்டணி கட்சியான தி.மு.க.வில் உள்ளவர்களின் குற்றச்சாட்டை முதல்- அமைச்சர் ஏன் தடுக்க வில்லை?

எனவே அமைச்சர் கந்தசாமி தனது கட்சியிலும், கூட்டணி கட்சியிலும் தனக்கு எதிராக நடைபெறும் அரசியலை புரிந்து கொண்டு செயல்பட வேண்டும்.

இவ்வாறு அன்பழகன் கூறியுள்ளார்.

Tags:    

Similar News