செய்திகள்
டெங்கு காய்ச்சல்

கூடலூரில் 5 பேருக்கு டெங்கு காய்ச்சல்- சுகாதார பணிகள் தீவிரம்

Published On 2020-05-05 04:03 GMT   |   Update On 2020-05-05 04:03 GMT
கூடலூரில் 5 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதையொட்டி சுகாதார பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
கூடலூர்:

நீலகிரி மாவட்டம் கூடலூர் எஸ்.எஸ்.நகரில் சமீபத்தில் மர்ம காய்ச்சலுக்கு பெண் பலியானார்.

இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் சுகாதாரத்துறையினர் ஆய்வு நடத்தினர். அப்போது பலருக்கும் காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த பகுதியில் மருத்துவ முகாம் தொடங்கப்பட்டது. அதில் பொதுமக்களின் சளி, ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. அதன் முடிவில் 5 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இதுகுறித்து நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறியதாவது:-

கூடலூர் எஸ்.எஸ்.நகரில் டெங்கு காய்ச்சலால் 5 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விரைவில் குணம் அடைந்து விடுவார்கள். அந்த பகுதியில் பிறருக்கு டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்கும் வகையில் சுகாதார பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து கூடலூரில் நகராட்சி ஊழியர்கள் மற்றும் சுகாதாரத்துறையினர் இணைந்து சுகாதார பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். வீடு, வீடாக சென்று காய்ச்சல் பாதிப்பு உள்ளதா? என்று பொதுமக்களிடம் விசாரிக்கின்றனர். மேலும் மருத்துவ பரிசோதனை செய்கின்றனர். கொசு மருந்து அடிக்கும் பணி மும்முரமாம நடந்து வருகிறது.

இது தவிர அங்குள்ள அனைத்து கட்டிடங்களிலும் தண்ணீர் தொட்டிகள் திறந்து வைக்கப்பட்டு உள்ளதா?, மழைநீர் தேங்கும் வகையில் டயர்கள் உள்ளிட்ட பொருட்கள் கிடப்பில் போட்டு வைக்கப்பட்டு உள்ளதா? என்று ஆய்வு நடத்துகின்றனர்.

மேலும் அங்குள்ள ஒரு கடையின் பின்புறம் மலைபோல குவித்து வைக்கப்பட்டு இருந்த பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணி 2-வது நாளாக நடந்து வருகிறது.
Tags:    

Similar News