வில்லியனூர் அருகே மோட்டார் சைக்கிள்களில் மணல் கடத்திய 2 வாலிபர்கள் கைது
வில்லியனூர்:
வில்லியனூர் அருகே கோணேரிகுப்பத்தில் சங்கராபரணி ஆறு உள்ளது. இந்த ஆற்றில் இரவு வேலையில் நூதன முறையில் மணல் கடத்தப்படுவதாக வில்லியனூர் போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் நேற்று இரவு சம்பவ இடத்துக்கு சென்றனர்.
அப்போது அங்குள்ள சங்கராபரணி ஆற்றில் இருந்து மோட்டார் சைக்கிள்கள் மூலம் சாக்கு மூட்டைகளில் மணல் கடத்தி வந்த 2 வாலிபர்களை போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள் அகரம் கிராமத்தை சேர்ந்த ஜீவா(வயது19), முருகன்(20) என்பதும், இவர்கள் சங்கராபரணி ஆற்றில் இருந்து மோட்டார் சைக்கிள்களில் மணலை கடத்தி சென்று ஒரு இடத்தில் குவித்து வைத்து அதனை மொத்தமாக விற்று வந்தது தெரியவந்தது.
இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர்.