செய்திகள்
கொரோனா வைரஸ்

திருக்கனூர் பகுதியில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படாததால் பொதுமக்கள் அவதி

Published On 2020-04-30 13:46 GMT   |   Update On 2020-04-30 13:46 GMT
திருக்கனூர் புதுநகர் மற்றும் காந்தி நகரை சேர்ந்தவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்று அறிவிக்கப்பட்டாலும் அப்பகுதியில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படவில்லை.
திருக்கனூர்:

விக்கிரவாண்டி பகுதியை சேர்ந்த கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட ஒருவர் திருக்கனூர் பகுதியில் உறவினர் வீட்டிற்கு வந்து சென்றதால் அப்பகுதியை சேர்ந்தவர்களுக்கு கொரோனா பரவி இருக்கலாம் என கருதி கடந்த 1-ந் தேதி திருக்கனூர் புதுநகர் மற்றும் காந்தி நகர் பகுதி சீல் வைக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் இருந்து யாரும் வெளியே வரவும், உள்ளே செல்லவும் அனுமதிக்கப்படவில்லை.

இதேபோன்று அதே நாளில் டெல்லி மாநாட்டுக்கு சென்று திரும்பிய காட்டேரி குப்பத்தை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருந்ததால் அப்பகுதியை போலீசார் சீல் வைத்தனர். இதற்கிடையே காட்டேரிகுப்பத்தை சேர்ந்தவருக்கும் திருக்கனூர் மற்றும் காந்திநகரை சேர்ந்த 10 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 3-வது கட்ட பரிசோதனையில் காட்டேரிகுப்பத்தை சேர்ந்தவருக்கும் மற்றும் திருக்கனூர் பகுதியை சேர்ந்த 10 பேருக்கும் கொரோனா தொற்று இல்லை என பரிசோதனையில் தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். ஆனாலும் தொடர்ந்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதற்கிடையே காட்டேரிக்குப்பம் பகுதியை சேர்ந்தவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பதால் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது.

அப்பகுதியில் பொதுமக்கள் சென்று வர அனுமதிக்கப்பட்டனர். அதே வேலையில் திருக்கனூர் புதுநகர் மற்றும் காந்தி நகரை சேர்ந்தவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்று அறிவிக்கப்பட்டாலும் அப்பகுதியில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படவில்லை.

அப்பகுதியை சேர்ந்தவர்கள் இதுவரை வெளியே செல்லவும் அனுமதிக்கப்படவில்லை. அப்பகுதியில் போலீசார் தொடர்ந்து முகாம் அமைத்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் அப்பகுதி மக்கள் வீட்டிலேயே முடங்கி போய் உள்ளனர். அத்தியாவசிய தேவைகளுக்காக கூட அவர்கள் வெளியே செல்ல முடியாமல் தவித்து வருகிறார்கள்.

இதற்கிடையே திருக்கனூர் பகுதியில் புதுவை எல்லையில் வெளிமாநிலத்தில் இருந்தும் தமிழகத்தின் பிற மாவட்டத்தில் இருந்தும் புதுவைக்கு வாகனங்களில் அத்தியாவசிய பொருட்கள் ஏற்றி வரும் டிரைவர்கள் மற்றும் கிளினருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட பிறகே அனுமதிக்கப்படுகிறார்கள். இதற்காக திருக்கனூர் எல்லை பகுதியில் முகாம் அமைத்து மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்து வருகிறார்கள். மேலும் போலீசாரும் கண்காணிப்பு பணியில் மேற்கொண்டு தேவையின்றி காரணங்களுக்காக புதுவைக்கு வாகனங்களில் வருவோரை திருப்பி அனுப்பி வருகின்றனர்.
Tags:    

Similar News