செய்திகள்
அன்பழகன் எம்எல்ஏ

கள்ள மது விற்பனை நடவடிக்கையை திசை திருப்ப பொய் வழக்குகள் பதிவு- கவர்னருக்கு அன்பழகன் எம்எல்ஏ கடிதம்

Published On 2020-04-27 15:48 IST   |   Update On 2020-04-27 15:48:00 IST
புதுவையில் கள்ள மது விற்பனை நடவடிக்கையை திசை திருப்ப பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கவர்னர் கிரண்பேடிக்கு அன்பழகன் எம்எல்ஏ கடிதம் எழுதியுள்ளார்.

புதுச்சேரி:

புதுவை மாநில அ.தி.மு.க சட்டமன்ற கட்சித் தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ கவர்னர் கிரண்பேடிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

கள்ள மதுபான விற்பனையில் தாங்கள் எடுத்த உறுதியான நிலைப்பாட்டினால் தற்போது மாநிலம் முழுவதும் கள்ள மது விற்பனை 90 சதவீதத்திற்கும் மேல் குறைந்துள்ளது. தங்களின் நடவடிக்கையை திருப்திபடுத்த வேண்டி ஒரு சில பொய்யான வழக்குகள் தேவையில்லாமல் பதிவு செய்யப்பட்டு தங்களின் சரியான நடவடிக்கை திசை திருப்பப்பட்டுள்ளது. அரசின் தவறான கொள்கை முடிவினால் மக்களுக்கு அத்தியாவசியமான பொது வினியோக திட்டம் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் தடையின்றி மற்ற மாநிலங்களில் இருந்து புதுவைக்கு கொண்டு வரப்படுகின்றது. ஆனால் 2 மாதத்திற்கு முன்பு இருந்த விலையில் 10 முதல் 30 சதவீதம் வரை கூடுதலாக விலை ஏற்றப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் உள்ள 20 பொருட்களின் விலை வியாபாரிகளால் மனம் போன போக்கில் உயர்த்தி விற்கப்படுகின்றன.

மாநிலத்தில் தினந்தோறும் விலை விவரத்தை ஆய்வு செய்யும் புள்ளி விவரத் துறை, குடிமைப்பொருள் துறை, எடைப் பிரிவு, உணவு பிரிவு, நுகர்வோர் பாதுகாப்பு பிரிவு, காவல்துறை ஆகியோர் இப்பிரச்சினையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் ஆட்சியாளர்களின் எண்ணப்படி அலட்சியத் துடன் உள்ளனர். எனவே, மக்களின் நலன் கருதி இதில் உள்ள உண்மை நிலையை உணர்ந்து கவர்னர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அன்பழகன் எம்.எல்.ஏ கடிதத்தில் கூறியுள்ளார்.

Similar News