செய்திகள்
தற்கொலை

முத்தியால்பேட்டை அருகே குடும்ப தகராறில் காதல் திருமணம் செய்த வாலிபர் தற்கொலை

Published On 2020-04-27 12:49 IST   |   Update On 2020-04-27 12:49:00 IST
முத்தியால்பேட்டை அருகே குடும்ப தகராறில் காதல் திருமணம் செய்த வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரி:

புதுவை முத்தியால்பேட்டை கணேஷ்நகர் பாப்பம்மாள் கோவில் தெரு, டோபிகானா பகுதியை சேர்ந்தவர் செந்தில்நாதன் (வயது28). சலவை தொழிலாளி. இவரது மனைவி கவுசல்யா (23) இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது.

இதற்கிடையே கவுசல்யாவுக்கும் அவரது மாமியாருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் கடந்த சில மாதங்களாக செந்தில்நாதன், தனது மனைவி மற்றும் குழந்தையுடன் சோலைநகர் மந்தை வெளி மாரியம்மன் கோவில் தெருவில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தார். அங்கு கடந்த சில நாட்களாக கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவினால் வேலையின்றி வீட்டில் முடங்கி போன செந்தில்நாதனுக்கும் அவரது மனைவி கவுசல்யாவுக்கும் நேற்றும் குடும்ப தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் விரக்தி அடைந்த செந்தில்நாதன் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்து வீட்டின் அறையை உள்பக்கமாக பூட்டிக்கொண்டு மனைவியின் சேலையால் மின் விசிறியில் தூக்குபோட்டு தொங்கினார்.வெகு நேரமாக கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த கவுசல்யா அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து பார்த்தார். அப்போது கணவர் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் கணவரை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே செந்தில்நாதன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து புகாரின் பேரில் சோலைநகர் புறக்காவல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News