செய்திகள்
இருசக்கர வாகனங்களை நிறுத்தி போக்குவரத்து போலீசார் விசாரித்தபோது எடுத்தபடம்.

அரியாங்குப்பம், மதகடிப்பட்டில் போக்குவரத்து போலீசார் தீவிர கண்காணிப்பு

Published On 2020-04-26 17:41 IST   |   Update On 2020-04-26 17:41:00 IST
அரியாங்குப்பம், மதகடிப்பட்டில் போக்குவரத்து போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அனுமதி கடிதம் இல்லாத வாகனங்களை திருப்பி அனுப்பினர்.
அரியாங்குப்பம்:

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக புதுவை மாநிலத்திலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனை கடைபிடிக்காத சிலர் மோட்டார் சைக்கிள்களில் தேவையின்றி வெளியே சுற்றி வருகின்றனர். இதன் காரணமாக நோய் பரவும் அபாயம் உள்ளது. இதனை தடுக்கும் வகையில் மாநில எல்லைகள் மூடப்பட்டு, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இருப்பினும் தமிழகத்தை சேர்ந்த பக்கத்து மாவட்டங்களான கடலூர், விழுப்புரத்தை சேர்ந்தவர்கள் கிராமப்புற சாலைகள் வழியாக புதுவைக்குள் வந்து செல்கின்றனர். இதை கட்டுப்படுத்தும் வகையில் நகரை ஓட்டிய பகுதியில் போக்குவரத்தை கண்காணிக்க உத்தரவிடப்பட்டது.

அதன்பேரில் தெற்கு பகுதி போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு சுப்பிரமணியன் தலைமையிலான போலீசார் அரியாங்குப்பம் புறவழிச்சாலை சந்திப்பில் நேற்று காலை தீவிர வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது கடலூர் மார்க்கத்தில் இருந்து புதுவை நோக்கி வந்த அனைத்து வாகனங்களையும் வழிமறித்து சோதனை செய்தனர். தமிழ்நாடு உள்பட வெளிமாநில பதிவு எண் கொண்ட கார், சரக்கு லாரி, மினி லாரி உள்ளிட்ட வாகனங்களுக்கு உரிய ஆவணம் இருக்கிறதா? என்று ஆய்வு செய்தனர். இதில் அவரச தேவை, மருத்துவர்கள் மற்றும் கலெக்டரிடம் அனுமதி கடிதம் பெற்ற வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டன. மற்ற வாகனங்களை போலீசார் எச்சரிக்கை செய்து, திருப்பி அனுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதேபோல் புதுச்சேரி - விழுப்புரம் சாலையில் மாநில எல்லையான மதகடிப்பட்டில் வில்லியனூர் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையிலான போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அத்தியாவசிய தேவையின்றி விழுப்புரம் பகுதியில் இருந்து இருசக்கர வாகனங்களில் புதுவைக்குள் வர முயன்ற 500-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி, திருப்பி அனுப்பினர்.

Similar News