செய்திகள்
யானை

காயத்துக்கு சிகிச்சை அளிக்க சென்ற மருத்துவ குழுவினர், வனத்துறையினரை விரட்டிய ஒற்றை யானை

Published On 2020-04-26 15:15 IST   |   Update On 2020-04-26 15:15:00 IST
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே காயத்துக்கு சிகிச்சை அளிக்க சென்ற மருத்துவ குழுவினர், வனத்துறையினரை ஒற்றை யானை விரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஊட்டி:

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள சில்வர் கிளவுட், கோக்கால், மேல்கூடலூர், கெவிப்பாரா, கோத்தர்வயல் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக 30 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று காயத்துடன் சுற்றி திரிகிறது.

அந்த யானை குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து பயிர்கள் மற்றும் வீடுகளையும் சேதப்படுத்தி வருகிறது. இதனால் அச்சம் அடைந்த பொதுமக்கள் யானையை விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இதனை தொடர்ந்து வனத்துறையினர் அந்த பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

மேலும் அந்த யானைக்கு சிகிச்சை அளிக்க முடிவு செய்த வனத்துறையினர் கால் நடை டாக்டர் பரிந்துரைப்படி பழங்களுக்குள் மாத்திரையை வைத்து யானை வரும் பாதையில் பழங்களை போட்டனர்.

யானையும் அந்த பழங்களை சாப்பிட்டதால் அதில் உள்ள மருந்துகள் மூலம் யானை குணமடைந்து வந்தது. இந்த நிலையில் கோவையில் இருந்து கால்நடை டாக்டர் மனோகரன், சுகுமாறன் தலைமையிலான குழுவினர் காட்டு யானையின் உடலை ஆய்வு செய்ய ஏழுமுறம் பகுதிக்கு சென்றனர். அங்கு நின்று காட்டு யானையை டாக்டர் குழுவினர் மற்றும் வனத்துறையினர் பார்வையிட்டனர்.

அப்போது திடீரென ஆக்ரோ‌ஷமான காட்டு யானை அவர்களை துரத்தி வந்தது. இதை பார்த்து அதிர்ச்சியான டாக்டர் குழுவினர் மற்றும் வனத்துறையினர் சிதறி அடித்து ஒடினர்.

பின்னர் யானை வனப் பகுதிக்குள் சென்றது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து வனச்சரகர் ராம கிருஷ்ணன் கூறுகையில், தொடர் சிகிச்சை மூலம் யானை குணமடைந்துள்ளது. தொடர்ந்து மருத்துவ குழுவினர் ஆலோசனைப்படி பழங்களில் மாத்திரை வைத்து யானைக்கு கொடுத்து வருகிறோம். திடீரென யானை துரத்தியால் அனைவரும் அதிர்சியடைந்தோம் என்றார்.

Similar News