செந்துறை அருகே பாம்பு கடித்து விவசாயி மரணம்
செந்துறை:
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள உஞ்சினி கிராமத்தை சேர்ந்தவர் சுப்ரமணியன் மகன் தியாகராஜன் வயது 50. விவசாயி.
இவருக்கு ராமாமிர்தம், தனம் என்கிற மனைவிகளும், பிரபாகரன், திலீபன், தினேஷ் என்கிற 3 மகன்களும், தீபா என்கிற மகளும் உள்ளனர். விவசாயி ஆன இவர் நேற்று அதிகாலை தூங்கி எழுந்து வீட்டின் பின்புறம் உள்ள ஏரிக்கரை அருகே இயற்கை உபாதை கழிக்க சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அங்கு மறைந்து இருந்த பாம்பு கடித்தது.
அலறி அடித்துக் கொண்டு வீட்டிற்கு ஓடி வந்த அவரை உறவினர்கள் மீட்டு செந்துறை அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து உறவினர்கள் உடலை வீட்டிற்கு கொண்டு வந்து அடக்கம் செய்ய முயன்றனர்.
இதுகுறித்து தகவலறிந்த இரும்பிலிகுறிசி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வீட்டிற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்ப முயன்றனர். இதனைக் கண்ட கிராம மக்கள் பிரேத பரிசோதனை செய்ய வேண்டாம் என்று போலீசாரிடம் கேட்டுக்கொண்டனர்.
ஆனால் போலீசார் பிரேத பரிசோதனை செய்யாமல் உடலை கொடுக்க முடியாது என்று கூறி உடலை கைப்பற்றி ஆம்புலன்ஸ் மூலம் பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் உள்ள இந்த சூழ்நிலையில் விவசாய ஒருவர் பாம்பு கடித்து இறந்த சம்பவம் உஞ்சினி கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.