செய்திகள்
கொரோனா பரிசோதனை

அரியலூர் மாவட்டத்தில் 8 முகாம்களில் தங்கியிருந்த 600 பேர் வீடுகளுக்கு அனுப்பி வைப்பு

Published On 2020-04-22 15:10 IST   |   Update On 2020-04-22 15:10:00 IST
அரியலூர் மாவட்டத்தில் வெளி மாவட்டத்தில் இருந்து வந்து 8 முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்த 600 பேர் அவரவர் வீடுகளுக்கு அனுப்பப்பட்டு முகாம்கள் அனைத்தும் மூடப்பட்டன.
அரியலூர்:

கொரோனா வைரசின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த 24-ந் தேதியில் இருந்து ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் வெளிநாடுகளில் இருந்து அரியலூர் மாவட்டத்திற்கு திரும்பிய 2022 பேரும் அவர்களது வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டு 28 நாட்களை முடித்துள்ளனர். இதில் அவர்கள் யாருக்கும் காய்ச்சல் அறிகுறிகள் இல்லை என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் கேரளா, பெங்களூரு உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும், திருப்பூர், கோயம்புத்தூர் உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்தும் வருகைதந்த 800 பேரை போலீசார் பிடித்து அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரசு கலைக்கல்லூரி, தொழிற் பயிற்சி நிலையம், தனியார் கல்லூரி உள்ளிட்ட 8 முகாம் களில் தங்க வைத்திருந்தனர். தினந்தோறும் இவர்களுக்கு வெப்பமாணி மூலம் காய்ச்சல் அறிகுறிகள் உள்ளதா? என்று மருத்துவ குழுவினர் கண்காணித்து வந்தனர். இதில் 14 நாட்களை நிறைவு செய்தவர்கள் படிப்படியாக வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர்.

இந்நிலையில் நேற்று திடீரென அனைத்து முகாம்களில் இருந்த சுமார் 600 பேர் அவர்களது காலம் முடியும் முன்னரே இரவோடு இரவாக அவர்களது சொந்த ஊருக்கு வாகனங்கள் மூலம் அனுப்பப்பட்டுள்ளனர். முகாம்களில் இருந்து செல்பவர்கள் அனைவரும் தங்களது உடைமைகளை அவர்களே சோப்பில் துவைத்து காயவைத்தபிறகு வீட்டிற்குள் செல்லவேண்டும். மறு அறிவிப்பு கொடுக்கும்வரை அவர்கள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகள் உத்திரவிட்டுள்ளனர்.

முகாம்களில் இருந்து அனுப்பப்படுவதற்கான காரணங்களை அரசு அதிகாரிகள் கூறாவிட்டாலும், தினந்தோறும் வெளி மாவட்டங்களில் இருந்து லாரிகள் மூலம் வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே உள்ளதால் இவர்களின் பராமரிப்பு செலவுகள் அதிகமாகின்றன. எனவே நிர்வாக செலவுகளை குறைப்பதற்காக முகாம்களில் உள்ளவர்களையும், இனி வருபவர்களையும் அவரவர் வீடுகளிலேயே தனிமைப்படுத்தி கண்காணிக்க முடிவுசெய்துள்ளதாக அதிகாரிகள் வட்டத்தில் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று காலை முதல் கிராம நிர்வாக அதிகாரிகள் முகாம்களில் இருந்து அனுப்பப்பட்டவர்களின் பட்டியலை வைத்துக்கொண்டு, அவர்களின் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என்பதற்கான அடையாள ஸ்டிக்கரை ஒட்டத்தொடங்கியுள்ளனர்.

Similar News