பாபநாசம் பகுதியில் உர தட்டுப்பாட்டால் பருத்தி சாகுபடி பணிகள் முடக்கம்- விவசாயிகள் வேதனை
மெலட்டூர்:
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் கோடை பயிராக பருத்தி அதிக அளவில் பயிர் செய்யப்பட்டுள்ளது கோடையில் நெல். உளுந்து பயிருக்கு மாற்றாக பருத்தி பயிர் செய்ய விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர் பருத்தி சாகுபடியில் அதிக லாபம் கிடைப்பதாலும் விற்பனை செய்வதற்கு அதிக சிரமம் இன்றி ஒழுங்கு முறை கமிட்டிகளில் பருத்தியினை பகிரங்க ஏலம் முறையில் குவிண்டாலுக்கு ரூ.6500-க்கு விற்பனை செய்ய முடியும் என்பதால் விவசாயிகள் கடந்த சில ஆண்டுகளாக கோடையில் பருத்தி பயிர் செய்ய அதிக ஆர்வம் காட்டுகின்றனர். நடப்பு ஆண்டு கடந்த ஆண்டை விட அதிக அளவில் இப்பகுதியில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
பாபநாசம் அதனை சுற்றியுள்ள அரையபுரம். ராஜகிரி, பண்டாரவாடை, தேவராயன்பேட்டை, வளத்தா மங்களம், மட்டையாண் திடல், மதகரம், நிறைமதி, பொன்மான் மேய்ந்தநல்லூர், உள்பட பல கிராமங்களில் பல நூறு ஏக்கர் பரப்பளவில் பருத்தி பயிரிடப்பட்டுள்ளது
தற்போதுபருத்தி விதை விதைக்கப்பட்டு 40 நாட்கள் கடந்து விட்டதால் பருத்தி செடிகள் தற்போது பூ பூத்து சப்பை வைக்கும் நிலையில் உள்ளதால் பருத்தி செடிக்கு 2-வது முறையாக டிஏபி. பொட்டாஷ், யூரியா ஆகியவை கலந்த கலப்பு உரங்களை பருத்தி செடிக்கு வைத்து எந்திரங்கள் மூலம் மண் அணைக்கும் பணி தொடங்கி உள்ளது
தற்போது 144 தடை உத்தரவு நடைமுறையில் உள்ளதால் அரசு வேளாண்மை உர கிடங்குகள், மற்றும் உரக்கடைகள் சரிவர திறப்பதில்லை. அதோடு போதுமான உரங்கள் கடைகளில் இருப்பு இல்லாததால் விவசாயிகள் சிரமப்பட்டு வருகின்றனர். சில தனியார் உர வியாபாரிகள் கூடுதல் விலைக்கு உரங்களை விற்கின்றனர். எனவே காம்ப்ளக்ஸ் உள்பட அத்தியாவசிய உரங்கள் தட்டுப்பாடு இன்றி கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.