செய்திகள்
பெண் பலி

எந்திரத்தில் சிக்கி பெண் பலி - கேரட் கழுவும் நிலையத்துக்கு அதிகாரிகள் சீல்

Published On 2020-04-19 15:48 IST   |   Update On 2020-04-19 15:48:00 IST
கேரட் கழுவும் எந்திரத்தில் சிக்கி இளம்பெண் பலியானதை தொடர்ந்து எந்திரம் செயல்பட்டு வந்த நிலையத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து சீல் வைத்தனர்.

ஊட்டி:

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே எதுமை கண்டி பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது50). இவரது மனைவி சுமித்ரா (43). இவர்களது மகள் நந்தினி (18). 10-ம் வகுப்பு வரை படித்துள்ள நந்தினி தனது தாய் சுமித்ராவுடன் கூலி வேலைக்கு சென்று வந்தார்.

நேற்று அதிகாலை தனது தாயுடன் எப்பநாடு பகுதியில் உள்ள தோட்டத்திற்கு கேரட் அறுவடை செய்ய சென்றார்.

பின்னர் அறுவடை முடிந்த பின்னர் கேரட்கள் மூட்டைகளாக கட்டப்பட்டு பாலாடாவுக்கு கொண்டு செல்லப்பட்டது. தொழிலாளர்களும் லாரியில் சென்றனர்.

அங்கு கேரட் மூட்டை களை பிரித்து கேரட் கழுவும் எந்திரத்தில் தண்ணீரை கொண்டு சுத்தப்படுத்தி மீண்டும் மூட்டைகளில் நிரப்பும் பணியில் தொழி லாளர்கள் ஈடுபட்டனர்.

அப்போது எதிர்பாராத விதமாக நந்தினியின் துப்பட்டா எந்திரத்தில் சிக்கியது. எந்திரம் வேகமாக இயங்கியதால் நந்தினியும் எந்திரத்தினுள் இழுக்கப்பட்டு தலை துண்டாகி பலியானார். தன் கண்முன்னே தனது மகள் பலியானதை கண்டு நந்தினியின் தாய் சுமித்ரா கதறி அழுதார்.

இதுகுறித்து தகவல் அறிந்த கேத்தி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே குன்னூர் தாசில்தார் குப்புராஜ் தலைமையிலான அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை மேற்கொண் டார். கேரட் கழுவும் எந்திரம் பாதுகாப்பாக உள்ளதா? அது சரிவர பராமரிக்கப்படுகிறதா என்பது குறித்து விசாரித்தனர்.பின்னர் உரிய அனுமதியின்றி இயங்கியதாக கூறி கேரட் கழுவும் எந்திரம் செயல்பட்டு வந்த நிலையத்துக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுத்தார். மேலும் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது.

Similar News