அரியலூர் அரசு மருத்துவமனையில் 200 படுக்கை வசதியுடன் கொரோனா சிறப்பு வார்டு
அரியலூர்:
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் கெரோனா வைரஸ் நோய் தடுப்பு கண்காணிப்பு அலுவலரும், தமிழக அரசின் நிதித்துறை சிறப்பு செயலாளருமான அனந்தகுமார் கலந்து கொண்டு கூறியதாவது:-
அரியலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை பணிகள் சிறப்பாக உள்ளது. மாவட்டத்தில் சுகாதார பணிகளில் ஈடுபட்டு வரும் பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு தேவையான முகக்கவசங்கள், மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் தயார் செய்யப்பட்டு வருகிறது. சாலை போக்குவரத்தில் உள்ள அனைத்து வாகனங்களுக்கும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்திட வட்டார போக்குவரத்து அலுவலர் மூலம் பணிகள் நடைபெற்று வருகிறது.
அரியலூர் அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட 200 படுக்கைகள் கொண்ட வார்டு அமைக்கப்பட்டுள்ளது என்றார்.
மேலும் அவர், தூய்மைப் பணியாளர்களை ஊக்கப்படுத்த வேண்டும். அத்தியாவசியப் பொருள்கள் ஏற்றிவரும் லாரிகள் மற்றும் வாகனங்களை காவல்துறையினர் தடை செய்யக் கூடாது. மேலும், அத்தியாவசியப் பொருட்களை ஏற்றுவதற்காக காலியாக செல்லும் வாகனங்களையும் தடை செய்யவோ, தடுக்கவோ கூடாது. அந்த வாகனத்தில் ஓட்டுநர் மற்றும் மற்றொரு நபர் மட்டுமே செல்ல வேண்டும்.
பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கிறார்களா என்பதையும், மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பகுதியையும் காவல் துறையினர் முழுமையாக கண்காணிக்க வேண்டும். தடை செய்யப்பட்ட பகுதியில் அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதற்கு உறுதி செய்ய வேண்டும் என்று அனைத்துத்துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
கூட்டத்துக்கு கலெக்டர் ரத்னா தலைமை தாங்கினார். காவல் துறை கூடுதல் இயக்குநர் சைலேஷ்குமார் யாதவ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன், மாவட்ட வருவாய் அலுவலர் பொற்கொடி, அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி முதன்மையர் முத்துகிருஷ்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சுந்தர்ராஜன், கோட்டாட்சியர்கள் பாலாஜி, பூங்கோதை, சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் ஹேமசந்த் காந்தி மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.